32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 4வது நாளான இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 69-75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சீன நாட்டைச் சேர்ந்த எர்பீக்கிடம், ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான தனிநபர் சாப்ரே (வாள்வீச்சு) பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். இந்நிலையில் இரண்டாவது சுற்றான டேபிள் சுற்றில், அவர் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை மனோன் பெர்னெட்டை எதிர்கொண்டார். இறுதியில் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்னெட் வெற்றிபெற்றார். இதனால், பவானிதேவி அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் சீனாவின் ஹீ ஜிஹீய் ஒரு ஒலிம்பிக் சாதனையை உருவாக்கி தங்கம் வென்றார். இந்தோனேசிய வீராங்கனை கான்டிகா ஐசா வெண்கல பதக்கம் வென்றார். இந்நிலையில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டு, அடுத்த இடத்தில் இருக்கும் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வில்வித்தை ஆண்கள் அணி பிரிவில் இந்திய அணி கால் இறுதிக்குத் தகுதி பெற்றது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் அணி, கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே துல்லியமான அம்புகளை ஏய்து புள்ளிகளை நேர்த்தியாகச் சேர்த்த இந்திய அணி இறுதியில் 6க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆரம்பித்த நாள் முதல் சீனா முதல் இடத்திலிருந்தது வந்த நிலையில், இன்று சீனாவை பின்னுக்குத் தள்ளி ஜப்பான் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஜப்பான் 8 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலங்களுடன் முதல் இடத்திலும். அமெரிக்கா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும். சீனா 6 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 3வது இடத்திலும் உள்ளது.