games

img

கிரிக்கெட் வானில் உதித்த புதிய வால்மீன்!

கிரிக்கெட் வானில் உதித்த புதிய வால்மீன்!

“கிரிக்கெட் உலகில் சில சிறுவர்களின் ஆட்டம் காலத்தின் நினைவேட்டில் என்றென்றும் பொறிக்கப்படும். 2011 மார்ச் 27, பீகாரின் மோதிபூர் கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி, இன்று உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். சஞ்சீவ், ஆர்த்தி தம்பதியினரின் கனவாக வாழத் தொடங்கிய இந்தச் சிறுவன், இன்று இந்தியாவின் பெருமையாக வலம் வருகிறார்”. குடும்பத்தின் தியாகம்  வைபவின் கதை ஒரு குடும்பத்தின் முழுமையான அர்ப்பணிப்பின் கதை. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற தனது நிறைவேறாத கனவை மகன் மூலம் நனவாக்க, விவசாய நிலத்தையே விற்றார் தந்தை.  தினமும் காலை 4 மணிக்கு எழுந்து தாயார் உணவு தயாரித்தார். தந்தையும் மகனும் 100 கிமீ பயணித்து காலை 7.30 முதல் மாலை வரை பயிற்சி. 4 ஆண்டுகள் தொடர்ந்த அந்த அர்ப்பணிப்பு இன்று பலன் கொடுத்திருக்கிறது. வரலாறு படைத்த சிறுவன்! 9 வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தபோதே பயிற்சியாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெறும் 12 வயது 284 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார். சங்ககராவும்-டிராவிட்டும் வைபவின் திறமையை உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் குமார சங்ககரா (இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்). அதிவேக பந்துகளை லாவகமாக எதிர்கொண்ட சூர்யவன்ஷியை பாராட்டினார். ராகுல் டிராவிட் (இந்திய அணியின் தடுப்புச் சுவர்) இந்த இளம் மேதையைப் பட்டை தீட்டினார். இரும்பிலிருந்து வைரமாக மெருகேறினார். (சங்ககரா, டிராவிட்  - ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள்) முதல் பந்தே சிக்ஸர் 2008 ஐபிஎல் தொடங்கிய பின் பிறந்த முதல் வீரர், 2024 ஆம் ஆண்டு ஏலத்தில், 14 வயதில் 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மிக இளவயதில் ஒப்பந்தம் பெற்ற வீரர். ஏப்ரல் 19, 2025 - வைபவின் வாழ்வில் மறக்க முடியாத நாள். லக்னோவுக்கு எதிராக அறிமுகமான இளைய வீரர், முதல் பந்தையே சிக்ஸராகப் பறக்கவிட்டு எதிரணியைக் கலங்கடித்தார். அந்த போட்டியில் ஒரு சிறுவன் அல்ல, ஒரு சூறாவளி களம் இறங்கியிருந்தது. வரலாறு படைத்த இரவு ஏப்ரல் 28, 2025 - இந்தியக் கிரிக்கெட் வரலாறு என்றென்றும் நினைவில் கொள்ளும் தேதி. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். 14 வயது 32 நாட்கள் - ஐபிஎல் வரலாற்றில் மிக இளவயதில் சதம் அடித்த வீரர்! அது மட்டுமா? ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான சதம், ஒரு இந்திய வீரரின் வேகமான சதம், சிக்ஸருடன் முடித்த சதம். அது ஆக்ரோஷமான ஆட்டமல்ல, ஆதிக்கம் செலுத்திய ஆட்டம். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் - 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்! சாதனை மழை செப்டம்பர் 2024, சென்னையில் ஆஸ்திரேலியா யு-19க்கு எதிராக, 58 பந்துகளில் 104 ரன்கள், இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 67 ரன்கள். ஒவ்வொரு போட்டியிலும் தனது தரத்தை நிலைநிறுத்தினார். வரலாறு படைத்த பயணம் பிப்ரவரி 2026, வைபவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மாபெரும் மாதம். ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் தனது உண்மையான சக்தியை வெளிப்படுத்தினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பிப்ரவரி 6, 2026, யு-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி. இங்கிலாந்துக்கு ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பை தீப்பிடிக்க வைத்தார். வெறும் 80 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள், ஆட்டமிழக்காமல் 175 ரன்கள்! யு-19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக 150 ரன்கள், இறுதிப்போட்டியில் அதிக ரன்கள், ஒரே போட்டியில் 15 சிக்ஸர்கள் - புதிய சாதனைகள்! அடுத்த சச்சினா? கிரிக்கெட் நிபுணர்கள் இப்போது ஒரே கேள்வி: வைபவ் சச்சின், யுவராஜ் போன்றவர்களின் சாதனைகளை முறியடிப்பாரா? அவரது தற்போதைய வடிவத்தைப் பார்க்கும்போது, அது சாத்தியமே. 14 வயதில் இத்தனை சாதனைகளைப் படைத்த இவர் இன்னும் 20 ஆண்டுகள் விளையாடப்போகிறார். சமீபத்தில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் சின்னம். இந்தியாவின் எதிர்காலம் இது வெறும் ஒரு விளையாட்டு வீரரின் பயணமல்ல. லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகளுக்கு உத்வேகம் தரும் கதை. வறுமையிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் வெற்றிகரமாக வெளிவர முடியும் என்பதற்கான உதாரணம். இடது கை மட்டையாளர், சூறாவளி வேகத்தில் ரன்களைக் குவிப்பவர், வரலாற்றுச் சாதனைகளைத் தொடர்ந்து படைத்துக் கொண்டி ருக்கும் இந்த 14 வயது மேதை, இன்னும் எத்தனை சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.  ஆனால் ஒன்று உறுதி - வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தங்க எழுத்துக்களில் பொறிக்கப்படும். நாம் ஒரு புதிய கிரிக்கெட் சகாப்தத்தின் தொடக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க வைபவ்! வெல்க இந்தியா!