ரத்தமும் கண்ணீரும் செதுக்கிய சிவப்பு வரலாறு
ஒன்றுபட்ட தஞ்சை மண் - இது நெல் விளையும் பூமி மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவத்தின் கொடூரங்களுக்கு எதிராகச் சாமானிய மனிதர்கள் நிமிர்ந்து நின்ற ‘நெருப்பு’ பூமி. ஒரு காலத்தில் இங்கே நிலம் என்பது ஒரு சிலரின் அதிகாரமாகவும், உழைப்பு என்பது பலரின் அடிமைச் சங்கிலியாகவும் இருந்தது. சாணிப்பாலும் சாட்டையடியும் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த இருண்ட காலத்தில், அம்மக்களைத் தட்டி எழுப்பியது ஒரு ‘சிவப்பு நிறக் காற்று’. அந்தக் காற்று எப்படிச் சூறாவளியாக மாறியது? குனிந்த முதுகுகள் எப்படி நிமிர்ந்தன? பண்ணை அடிமைகள் எப்படி விடுதலை பெற்றார்கள்?-இந்த வினாக்களுக்கான விடைதான் ‘திருப்பி அடித்த வரலாறு’. வெறும் காகிதங்களில் எழுதப்பட்ட வரலாறு அல்ல இது; தென்பரையின் சேற்றில், களப்பாலின் வரப்புகளில், கீழ்வெண்மணியின் சாம்பலில் உழைக்கும் மக்கள் தங்கள் ரத்தத்தால் எழுதிய காவியம். 1920-களின் தொழிற்சங்க முழக்கங்கள் தொடங்கி, இன்று 2026-ன் நவீனப் போராட்டங்கள் வரை ஒரு நூற்றாண்டு காலத் தஞ்சை மண்ணின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை, ஒரு காவியத்தின் நயத்தோடும் ஆய்வின் ஆழத்தோடும் நம் முன் விரிக்கிறது இந்த உரையாடல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும், எளிய மக்களின் வாழ்வியலைத் தன் பேனாவால் செதுக்கும் எழுத்தாளர் ‘திருப்பி அடித்த வரலாறு’ நூலின் ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் இணைந்து நடத்தும் இந்த உரையாடல், நம்மை ஒரு வரலாற்றுப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது வெறும் உரையாடல் அல்ல; நம் முன்னோர்கள் சிந்திய வியர்வைக்கும், ரத்தத்திற்கும் நாம் செலுத்தும் வீர வணக்கம்!
அறிமுகம்: ஒரு வரலாற்றுத் தேவை ஜி.ராமகிருஷ்ணன்: தோழர் தமிழ்ச்செல்வன், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் வரலாறு என்பது அரசியல் வரலாறு மட்டும் அல்ல; அது ஒரு மிகப்பெரிய வீர காவியம். முதல் தலைமுறைத் தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இரண்டாம் தலைமுறை யினரும் மறைந்து வரும் சூழலில், மூன்றாம் தலைமுறையினர் இயக்கப் பணியில் உள்ளனர். இந்தச் சூழலில், 1920 முதல் தற்போது வரையிலான ஒரு நூற்றாண்டு காலப் போராட்டங் களை ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் “திருப்பி அடித்த வரலாறு” நூல் அந்தப் பணி யைச் செம்மையாகச் செய்திருக்கிறது. ச. தமிழ்ச்செல்வன்: உண்மை தான் தோழர். ஒரு புனைவு எழுத்தாள ரான நான் இந்த ஆய்வை மேற் கொண்டபோது, வரலாறே ஒரு புனை வை விட பிரமிப்பாக இருந்தது. தொடக்கத்தில், “அந்த மண்ணைச் சேராத நான் இதை எழுதினால் சரியாக இருக்குமா?” என்ற தயக்கம் இருந்தது. ஆனால், தரவுகளை ஆய்வு செய்தபோது அது எனக்குப் பெரும் படிப்பினையாக அமைந்தது.
1920- களில் சென்னைத் தொழிற்சங்க இயக்கத்தின் தாக்கத்தால் நாகப்பட்டி னத்தில் உருவான ரயில்வே தொழி லாளர் போராட்டம்தான் இதற்கான விதை. 1. தொடக்க காலப் போராட்டங்கள்: 1920 -1942 ச. தமிழ்ச்செல்வன்: தமிழகத்தை யே உலுக்கிய ‘10 நாட்கள் ரயில்வே போராட்டம்’ நாகப்பட்டினத்தில் நடந் தது. வஉசி போன்ற தலைவர்கள் அங்கு உரையாற்றினார்கள். அப்போ துதான் மணலூர் மணியம்மை போன்றவர்கள் அந்த பழமைவாத சமூகத் தடைகளை உடைத்து வெளி வந்தார்கள். பிராமண விதவைப் பெண்ணாக இருந்தவர், அந்தச் சமூகம் உருவாக்கிய அத்தனை தடை களையும் தாண்டி, ஆண் வேட மணிந்து, கையில் சிலம்பத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்குச் சென்று அரசியல் பேசினார். ஜி. ராமகிருஷ்ணன் : அந்த உதிரிப் போராட்டங்களை எல்லாம் ஒருங்கி ணைத்ததுதான் கம்யூனிஸ்ட் கட்சி யின் சாதனை. 1930-களிலேயே “பல்வேறு சாதி விவசாயக் கூலிகள் வர்க்க ரீதியாக அணிதிரள்வதை நான் பார்க்கிறேன்” என்று ஒரு நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டது, கம்யூனிசக் கரு த்தியல் வேரூன்றியதைக் காட்டியது. 1942-க்குப் பிறகு பி. சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற தோழர்கள் இதை ஒரு பெரும் இயக்கமாக மாற்றி னார்கள்.
2. தென்பரை வழி : ஒரு திருப்புமுனை ச. தமிழ்ச்செல்வன்: தஞ்சை கம்யூ னிஸ்ட் இயக்க வரலாறு ‘தென்பரை’ கிராமத்தில் இருந்து தான் தொடங்கு கிறது. உத்தராபதி மடத்துக்குச் சொந்தமான நிலங்களில் விளைச்சல் பொய்த்தாலும் குத்தகையைச் சரியாகக் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. விவசாயிகள் தவித்தபோது, மணலி கந்தசாமி தலை மையிலான போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. மக்கள் இதை “கம்யூனிஸ்ட் பாதை” என்று சொல்வதற்கு முன்னால், “தென்பரை வழி” என்றே அழைக்கத் தொடங்கினார்கள். ஜி. ராமகிருஷ்ணன்: அங்கிருந்த நிலக்குவியல் பிரமிக்கத்தக்கது. மறுபுறம் பண்ணை அடிமைகளின் நிலை மிகக் கொடுமை. வேலைக்கு வரத் தாமதமானால் மரத்தில் கட்டி வைத்துச் சாட்டை அடி கொடுப்பார்கள், சாணிப்பால் ஊற்றுவார்கள். இந்த இழிவை ஒழிக்கத்தான் பி. சீனிவாச ராவ், “அடிச்சா திருப்பி அடி!” என்ற முழக்கத்தைக் கொடுத்தார். அதன் விளைவுதான் நீங்கள் நூலுக்கு வைத்துள்ள தலைப்பு: ‘திருப்பி அடித்த வரலாறு’. 3. வர்க்க ஒற்றுமை எனும் ஆன்மா ஜி. ராமகிருஷ்ணன்: தோழர், நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘வர்க்க ஒற்றுமை’ பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டும்.
1940-களில் தஞ்சை மாவட்டம் என்பது சாதியக் கொடுமைகளின் உச்சத்தில் இருந்தது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி செய்த ஆகச்சிறந்த வேலை என்ன வென்றால், சாதியால் பிரிந்து கிடந்த உழைக்கும் மக்களை ‘வர்க்கம்’ (Class) அடிப்படையில் ஒன்று சேர்த்தது தான். 95% பண்ணை அடிமைகள் தலித் மக்கள்; குத்தகை விவசாயிகள் பி.சி பிரிவினர். இவர்கள் இருவரை யும் செங்கொடி இயக்கம் ஒன்றி ணைத்தது. இது இந்திய அளவிலேயே ஒரு ‘கிளாசிக்கல் கிளாஸ் ஸ்ட்ரகிள்’ - ஒரு உன்னதமான வர்க்கப் போராட்டம் ச. தமிழ்ச்செல்வன்: சரியாகச் சொன்னீர்கள் தோழர். நூலைத் தொகுக்கும்போது பி.எஸ். தனுஷ் கோடி அவர்களின் அனுபவங்கள் என்னை உலுக்கின. அவர் காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம் எனப் பல இடங்களுக்குச் சென்றும், அங்கெல் லாம் நீடித்த தீண்டாமையைக் கண்டு விரக்தியடைந்துதான் செங்கொடி இயக்கத்திற்கு வருகிறார். “செங்கொடி இயக்கம் மட்டும்தான் சாதி வேறுபாடின்றி அனைவரையும் ஒரே களத்தில் நிறுத்துகிறது” என்று அவர் பதிவு செய்திருக்கிறார். 4. களப்பால் குப்பு: ஒரு மக்கள் நாயகன் ச. தமிழ்ச்செல்வன்: களப்பால் குப்புவின் வரலாறு மிகவும் உத்வேக மானது. பண்ணையாருக்குத் தெரி யாமல் தன் மகனைப் படிக்க வைக்க முயன்ற தந்தை, அதை அறிந்த பண்ணையார், குப்புவை அடிக்கும் போது, அந்தச் சாட்டையைப் பிடுங்கித் திருப்பி அடித்த குப்புவின் வீரம் அசாதாரணமானது. அவர் மக்களைத் திரட்டி, பி.எஸ்.ஆரை அழைத்து வந்து விவசாயிகள் சங்கத்தை வலுப்படுத்தினார். ஜி. ராமகிருஷ்ணன்: மிராசுதார் ஒரு நாற்காலியிலும், களப்பால் குப்பு இன் னொரு நாற்காலியிலும் அமர்ந்து ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தியதே அந்த மண்ணின் மிகப்பெரிய சமூகப் புரட்சி.
பி. சீனிவாசராவ் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், தலித் மக்களின் வீடுகளில் தங்கி, அவர்களோடு உண்டு, அவர்கள் மொழியில் பேசியது தான் மக்களைப் பெரும் திரளாக மாற்றி யது. 5. கீழ்வெண் மணி: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு ஜி. ராமகிருஷ்ணன்: இந்த வரலாற்றின் வலிகள் நிறைந்த பக்கம் கீழ்வெண்மணி. 1968-ல் நடந்த அந்தச் சம்பவம், நிலப்பிரபுத்துவத்தின் வன்மத்தைக் காட்டியது. “கூலியைக் கூட்டு” என்று கேட்டதற்காக 44 உயிர்களை உயிரோடு எரித்த கொடூரம் அது. ஆனால், அந்த ரத்தம் வீண் போக வில்லை. அந்தத் தியாகம்தான் இன்று தஞ்சை மண்ணில் விவசாயிகள் பெற்றுள்ள பல உரிமைகளுக்கு அஸ்திவாரம். ச. தமிழ்ச்செல்வன்: ஆமாம் தோழர். வெண்மணி என்பது ஒரு முடிவு அல்ல, அது ஒரு தொடக்கம். அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தமிழ கத்தின் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் வேகம் எடுத்தன. உதிரிப் போராட்டங் களாகத் தொடங்கி, இன்று ஒரு வலுவான இயக்கமாக வளர்ந்திருப் பதை 2024 வரையிலான தரவுகளில் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக, பெண்களின் பங்களிப்பு இதில் மகத்தானது. செங்கொடியைத் தாங்கி நின்ற அந்தத் தாய்மார்களின் கதைகள் இதில் அதிகம் இடம் பெற்றுள்ளன.
6. இளைய தலைமுறைக்கான செய்தி ச. தமிழ்ச்செல்வன்: இந்த நூலை 1920-1964 மற்றும் 1964-2024 என இரு தொகுதிகளாகப் பிரித்துள் ளேன். இது பழைய வரலாறு மட்டு மல்ல, இன்றும் நாம் எதிர்கொள்ளும் நிலத்திற்கான; மற்றும் சாதிய அமைப்புக்கு எதிரான போராட்டங் களுக்கு ஒரு வழிகாட்டி. ஒரு எழுத்தா ளராக எனக்கு ஒரு சவால் இருந்தது; வரலாற்றை வெறும் விபரத் தொகுப் பாக கொடுக்காமல், அந்த மக்களின் உணர்வுகளோடு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். தோழர் அப்பண சாமி போன்றவர்கள் சேகரித்த வாய்மொழி வரலாறுகள் எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. ஜி. ராமகிருஷ்ணன்: இது ஒரு முக்கியமான அம்சம். பாதிக்கப்பட்ட மக்களின் குரலே உண்மையான வர லாறு. இன்று உலகமய மாக்கல் சூழலில் வர்க்கப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு வருகிறதோ என்ற ஐயம் சிலருக்கு உண்டு. அவர்களுக்கு இந்த நூல் ஒரு பதிலடி. எப்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எந்த வசதியும் இல்லாத காலத்தில், செங்கொடியையும் கொள்கையையும் பிடித்துக்கொண்டு மக்கள் வென்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ச. தமிழ்ச்செல்வன்: உண்மை தோழர். “நாம் இவ்வளவு பெரிய வர லாற்றின் சொந்தக்காரர்கள்” என்ற உணர்வே இன்றைய இளைஞர் களுக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கை யைத் தரும்.
ஜி. ராமகிருஷ்ணன்: சிறப்பாகச் சொன்னீர்கள். 900 பக்கங்கள் கொண்ட இந்த இரண்டு தொகுதி களும், வாசகர்களுக்கு ஒரு பொக்கிஷ மாக அமையும். பாரதி புத்தகாலய த்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ச. தமிழ்ச்செல்வன் : நன்றி தோழர். இந்த வரலாற்றைத் தொகுத்ததில் எனக்கும் ஒரு மனநிறைவு கிடைத்துள்ளது. திருப்பி அடித்த வரலாறு தஞ்சை மண்ணில் மார்க்சிய இயக்கம்- போராட்டங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்று ஆவணம் பாகம் 1: 1920 - 1964 பாகம் 2: 1964 - 2024 ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் (900+ பக்கங்கள்)
