மகளிர் உலகக்கோப்பை 2024 இன்றைய ஆட்டம்
9ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளியன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (குரூப் ஏ) அணிகள் மோதுகின்றன. அரையிறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டம் மிக முக்கியமானது என்பதால் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : துபாய் மைதானம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சின்னர்
சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஷாங்காய் ஓபன் டென்னிஸ் (ஆடவர் பிரிவு மட்டும்) தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வியாழனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர் - தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
உங்களுக்கு தெரியுமா? ஒலிம்பிக், உலகக்கோப்பை போட்டிகளில் டெக்னிக்கல் முறையில் விளையாட முடியாது
விளையாட்டு உலகில் புத்திக்கூர்மை மற்றும் டெக்னிக்கல் (புதிய சிந்தனை மற்றும் செயல்திறன் செயல்பாடு) முறையில் ஸ்மார்ட்டாக விளையாடும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்த்து இருப்போம். அவைகள் எல்லாம் சாதாரண உள்ளூர் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச தொடர்களில் மட்டுமே நிகழ்ந்தவையாக மட்டுமே இருக்கும். ஒரு போதும் ஒலிம்பிக் மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் நிகழ்ந்தவைகளாக இருக்காது. காரணம் ஒலிம்பிக் மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் தங்கம் அல்லது உலகக்கோப்பையை வென்ற ஆக வேண்டும் என்ற ஒற்றை பதற்ற நிலையில் மட்டுமே வீரர் - வீராங்கனைகள் இருப்பார்கள். அதனால் நிதானம், அதிரடி, ஆக்ரோஷம் ஆகிய முறையிலேயே தனது ஆட்டத்திறனில் கவனம் செலுத்துவார்களே தவிர, டெக்னிக்கல் என்ற சிறப்பு திறனை வெளிப்படுத்த தயங்குவார்கள். புரியம்படி சொன்னால் அதுபற்றி சிந்திக்கவே மாட்டார்கள். பதற்ற நிலையில் டெக்னிக்கல் முறை எடுபடாது என்றெல்லாம் இல்லை. ஆனால் சற்று சொதப்பினால் நாட்டின் மானம் பறிபோய்விடும் என்பதால் தான் இந்த முறையை அவர்கள் கையில் எடுப்பதில்லை.