டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் விராட் கோலி
கிரிக்கெட் உலகின் முக்கிய நட்சத்திர வீரரும், இந்தியாவின் பேட்டிங் தூணாக விளங்கிய விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்களன்று அறிவித்தார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”கிரிக்கெட்டில் நான் முதல் முறையாக “பேக்கி ப்ளூ” (இந்திய வெள்ளை ஜெர்சி) அணிந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையாகச் சொன்னால் டெஸ்ட் வடிவம் என்னை இந்தப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் கற்பனை கூட செய்யவில்லை. டெஸ்ட் என்னை சோதித்தது, வடிவமைத்தது மற்றும் வாழ்நாள் முழுவதும் நான் தாங்கிச் செல்லும் பாடங்களைக் கற்றுத் தந்தது. வெள்ளை ஜெர்சியில் (வெண் உடையில்) விளையாடுவதில் எனக்கு ஒரு ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வு இருக்கிறது. அமைதியான போராட்டம் மற்றும் யாரும் காணாத சிறிய தருணங்கள் அதில் உள்ளன. ஆனால் அவை என்றும் நினைவில் நிற்கும். டெஸ்ட் வடிவத்திலிருந்து ஒரு படி தூரம் நகரும் இந்த நேரத்தில், இது எளிதான முடிவு இல்லை. ஆனால் இது சரியானது என்று உணர்கிறேன். நான் என்னுடைய முழுமையையும் டெஸ்ட் போட்டிக்காக தான் கொடுத்தேன். டெஸ்ட் விளையாட்டுக்காக என்னுடன் மைதானத்தைப் பகிர்ந்தவர்களுக்காக மற்றும் இந்தப் பயணத்தில் என்னைப் புரிந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றியுணர்வோடு விடைபெறு கிறேன். என் டெஸ்ட் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதெல்லாம், ஒரு புன்னகையுடன் தான் நினைவுகளில் மூழ்குவேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இனி ஒருநாள் மட்டுமே...
2024ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி உலகக்கோப்பை வென்ற கையோடு கோலி சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் போட்டி களில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித் துள்ளார். இனிமேல் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். கோலியை போல கடந்த வாரம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவும் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலியும்... சிவப்புப் பந்தும்...
123 போட்டிகள்
46.85 சராசரி (பேட்டிங்)
9,230 ரன்கள்
30 சதம்
7 இரட்டை சதம்
31 அரை சதம்
254 அதிகபட்ச ரன்கள்
121 கேட்ச்
டெஸ்ட் கிரிக்கெட்டின் மீட்பாளர்
கோலி 2008ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தார். அப்போது ஒருநாள் மற்றும் டி-20 ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் காலடி வைத்த கோலி தொடக்கத்தில் சறுக்கினார். எனினும் தோனி, விவிஎஸ் லட்சுமணன், டிராவிட் அளித்த ஊக் கத்தால் டெஸ்ட் போட்டியில் லாரா, பிராட் மேன், சச்சின் போன்று முடிசூடா மன்ன னாக உருவெடுத்தார். தொடர்ச்சியாக சதங் களை குவித்த கோலி குறுகிய காலத்தில் 30 சதங்களை அடித்து அசத்தினார். இதில் 31 அரை சதங்களும் அடங்கும். குறிப்பாக டி-20 லீக் வளர்ச்சி உச்ச காலத்தில் (2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு) டெஸ்ட் கிரிக் கெட்டின் மீட்பாளராக கோலி கொண்டாடப் பட்டார். அதாவது கோலியின் நிதான அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் போட்டி மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது.