ஆஸ்திரேலியாவுடான 4ஆவது டெஸ்டின் 2ஆம் நாள் முடிவில், இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி (பாக்ஸிங் டே டெஸ்ட்) மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸின் முடிவில் 474க்கு ஆல் அவுட்டானது.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் ஆடிய ஜெய்ஸ்வால்(82), கே.எல்.ராகுல்(24) மற்றும் விராட் கோலி(36) ஆகியோர் இரட்டை இலக்கத்தில் ரன்களை குவிக்க, இந்திய அணியின் ரன் சீராக முன்னேறியது. ஒரு கட்டத்தில் மூவரும் விக்கெட்களை பறிகொடுக்க ரன்னின் வேகம் குறைந்த நிலையில், 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்மூலம் 310 ரன்கள் பின்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸி. சார்பில் கம்மின்ஸ், போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.