தொடங்கியது முதலமைச்சர் கோப்பை போட்டிகள்!
சென்னை உட்பட நான்கு நகரங்களில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை வெள்ளியன்று (அக்.4) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என ஐந்து வகை பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. 33 ஆயிரம் வீரர்கள் மாநிலம் முழுவதும் இருந்தும் சுமார் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மாவட்ட மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இதில் வெற்றி பெற்ற 33 ஆயிரம் பேர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. இ-ஸ்போர்ட்ஸ் இந்தத் தொடரில் தடகளம், டென்னிஸ், பேட்மிட்டண், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கைப்பந்து, கேரம், வாள் வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக் உட்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது. ஒரு லட்சம் முதல் பரிசு! இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தனி நபர் பிரிவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே தலா ரூ. 75, 50, 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகள் பெற முடியும். தொடக்க விழா! இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று(அக்.4) மாலை 4 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் மும்முறை தாண்டுதல் வீரர் பிரவீன் சித்திரைவேல் ஆகியோர் இப் போட்டிக்கான சுடரை ஏந்திச் சென்றனர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முறைப்படி போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் வீரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உலகக் கோப்பை தகுதிச்சுற்று மீண்டும் களத்திற்கு வந்த மெஸ்சி!
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அர்ஜெண்டினா அணி இதுவரை 8 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, உலகக் கோப்பை தகுதி சுற்றின் 2 ஆட்டங்களில் விளையாட முடியவில்லை. இத னால் அந்த அணியும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி வருகிற 10 ஆம் தேதி வெனிசுலாவையும், 15 ஆம் தேதி பொலிவி யாவையும் சந்திக்கிறது. இந்த இரு ஆட்டங்களி லும் அணியை மெஸ்சியே வழிநடத்திச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சகவீரர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.