மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்திலிருந்து விராட்கோலி மற்றும் ரிஷப் பந்த் விலகியுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. அதனை தொடர்ந்து ஈடன் கார்டனில் நடந்த 2வது டி20 போட்டியில் இரு வீரர்களும் முக்கியமான அரை சதங்களை அடித்தனர். இதன் மூலம் இந்தியா 186 ரன்களை இலக்காகக் கொண்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிசிசிஐயால் கோவிட் பயோ-பப்பில் இருந்து பிரேக் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் விராட் கோலியும், ரிஷப் பந்த்தும் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட்கோலி பங்கேற்கவுள்ளார். அவர் தனது 100வது டெஸ்டை மொஹலியில் விளையாடுகிறார்.
ரிஷப் பந்த்தும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காமல் டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடுவார். இவர் 2வது டி20 ஆட்டத்தில் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் என்ற விருதை வென்றார்.
இதையடுத்து 3வது டி20 ஆட்டத்தில் விராட்கோலி, ரிஷப் பந்த்க்கு பதிலாக ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புண்டு. இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது