games

img

வங்காளதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை

வங்காளதேசத்துக்கு வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில்  இலங்கை அணி வென்றது.    

இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது.    

3ஆவது நாள் ஆட்டத்தில் திமுத் கருணாரத்னே 80 ரன்கள் எடுத்த நிலையில் சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து மெண்டிஸ் 11 ரன்களில் வெளியேற ராஜிதா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.  58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி சில்வா அவுட்டானார். 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளது.    

இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 506 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மேத்யூஸ் 145 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து தனது 2ஆவது இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை இழந்தது. 4வது ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது.          

இதையடுத்து, இன்று 5 ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அபாரமாக விளையாடிய லிட்டன் தாஸ் அரை சதம் அடித்து 52 ரன்களில் ,ஷாகிப் அல் ஹசன் அரைசதம் அடித்து 58ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 169 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.      

இதையடுத்து, இலங்கை அணி 3 ஓவரில் வெற்றிக்கு தேவையான 29 ரன்களை எடுத்தது. அத்துடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.