ஐபிஎல் நிறைவு விழாவை தொடர்ந்து இறுதியாக இரு அணிகள் மோத உள்ளன.
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி திடலில் 15வது ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்று வருகிறது. இந்த விழா ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியுடன் தொடங்கியது. மேலும் இதில் பாலிவுட் திரைப்பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.
நிறைவு விழாவை தொடர்ந்து இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. முதல் சீசனுக்கு பிறகு ராஜஸ்தான் அணி விளையாடவுள்ள முதல் இறுதிப் போட்டி இதுவாகும். இதனால் இறுதிப் போட்டியில் 2008 ஆம் கோப்பை வீரர்களை ராஜஸ்தான் அணி நிர்வாகம் கவுரவிக்க உள்ளது.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் மறைந்த ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.