இந்தியாவுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், ஐசிசி சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தியது. குறிப்பாக, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை வைத்துவந்தது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபில் தொடரில், இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் பொதுவான மைதானங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 2027 ஆம் ஆண்டு வரை நடக்கும் அனைத்துவிதமான ஐசிசி போட்டி தொடர்களிலும், பாகிஸ்தான் - இந்தியாவுக்கான போட்டிகள் இரு நாடுகளுக்கும் பொதுவான மைதானங்களில் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசியும் ஒப்புதல் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி, இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான உலகக்கோப்பை, 2026 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை ஆகிய அனைத்திற்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தானில் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.