யூடியூப் சேனல் மூலம் இளைஞர்களின் உயிர்களை காவு வாங்கும் “போலி உடற்பயிற்சி நிபுணர்கள்”
விதிகள் வகுக்குமா ஒன்றிய அரசு?
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்றாற் போல தொழில் வளர்ச்சியும் மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கியமானவையாக இருப்பது யூடியூப் மூலம் சம்பாதிப்பது ஆகும். இயற்கை மற்றும் செயற்கை மருத்துவம், மிமிக்கிரி, நடனம், உணவு, சாகசம், உடற்பயிற்சி, அழகு கலை என பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை வெளியிட்டு யூடியூப் மூலம் மக்கள் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் யூடியூப் மூலம் சம்பாதிப்பவர்கள் உடற்பயிற்சி பிரிவுகளில் ஆலோசனை என்ற பெயரில் போலியான ஆலோசனைகளை வழங்கியும், புரோட்டின் பவுடர்களை பயன்படுத்தி கட்டு உடல்களை காட்டி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகின்றனர். அதாவது அவர்களை சொல்வதை கேட்டால் எங்களை போன்று கட்டு உடல்கள் கிடைக்கும் என உடற்பயிற்சிக்கு அடிப்படையற்ற தகவல்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக இந்த போலி உடற்பயிற்சி நிபுணர்களால் இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உடற்பயிற்சிகளில் அபாயகரமானது புஷ் அப்ஸ் தான். போதிய பயிற்சி இல்லாமல் புஷ் அப்ஸ் மேற்கொள்வது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் யூடியூப் மூலம் வலம் வரும் “போலி உடற்பயிற்சி நிபுணர்கள்” புஷ் அப்ஸ் பற்றியே அதிகம் பாடம் எடுக்கிறார்கள். 5 வகை உள்ளது ; 10 வகை உள்ளது ; 2 செட், 3 செட் என அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டும் ; இதனை பின்பற்றினால் கட்டு உடல் 10 நாட்களில் கிடைத்துவிடும் என புரளியை கிளப்பி விடுகிறார்கள். இதனை நம்பி இளைஞர்கள், இளம் பெண்கள் போதிய பயிற்சி இல்லாமல் புஷ் அப்ஸ் எடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். சில இளைஞர்கள் உயிரையும் இழந்துள்ளனர். உணவு, தண்ணீர் மூலம் விளம்பரம் இந்த உணவை சாப்பிட்டால் மட்டுமே கட்டு உடல் கிடைக்கும், இதனை சாப்பிட்டால் கட்டு உடல் கிடைக்காது என மருத்துவ வரம்புக்கு மீறி ஆலோசனைகளை அள்ளி விடுகின்றனர். குறிப்பாக நீரூற்றுகளில் கிடைக்கும் நீரை அருந்தினால் தான் கட்டு உடல் கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனை நம்பி இளைஞர்கள் உடல்நலத்தை இழந்து வருகின்றனர். இஷ்டத்துக்கு உடற்பயிற்சி செய்ய முடியாது புதிதாக ஒரு நபர் உடற்பயிற்சி கூடத்துக்கு (ஜிம்) சென்றால் அங்கு இருக்கும் பயிற்சியாளர்கள் சொல்படி தான் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியும். தானாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஒரு வருடம் கடந்த பின்பு தான் கடினமான பயிற்சிக்கு அனுமதி வழங்குவார்கள். தன்னுடைய இஷ்டத்துக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 3 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் யூடியூப் போலி ஆலோசகர்கள் 3 ஆண்டு பயிற்சியுடன் கூடிய கடினமான பயிற்சி கட்டமைப்பை ஒரே வீடியோவில் மேற்கொள்ள அறிவுரை வழங்குகிறார்கள். இதுதான் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை தடுக்க ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கினால் தான் இளசுகளின் உயிரை காப்பாற்ற முடியும்.