அரசாணைப்படி பணி மேம்பாட்டுத் தொகை கேட்டு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
சென்னை, ஆக. 7 - பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க கோரி வியாழனன்று (ஆக.7) கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரி ஆசிரியர் களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை செயல்படுத்தக் கோரி அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கோவை, தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அரசாணைப்படி அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழ மையன்று (ஆக.7) போராட்டம் நடை பெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணி யம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஏ.டி. செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், “நான்கரை ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பணி மேம்பாட்டுக்கான நிதியை வழங்கக் கோரி 30-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடக்கிறது. இந்த அரசாணையை அமல்படுத்தி னால் அரசுக்கு 5 கோடி ரூபாய்தான் செலவாகும். இது பெருந்தொகை அல்ல” என்றார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் காந்திராஜன் கூறுகையில், “உயர்கல்வித்துறை செய லாளர்கள் 6 பேர் மற்றும், 2 உயர்கல்வித் துறை அமைச்சர்களிடம் முறையிட்டும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளனர். பணி மேம்பாட்டுத் தொகையை வழங்க மறுப்பதற்கான காரணத்தையும் கூற மறுக்கின்றனர்” என்றார்.