tamilnadu

img

ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி ஆக.18- முதல் காத்திருப்பு போராட்டம்

ஓய்வூதியப் பலன்களை வழங்கக் கோரி  ஆக.18- முதல் காத்திருப்பு போராட்டம் 

தருமபுரி, ஆகஸ்ட் 7 –   ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி ஆகஸ்ட் 18 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.  முக்கிய கோரிக்கைகள்  1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி இதை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.  2023 ஜூலை முதல் ஓய்வுபெற்ற 3,500 பேருக்கு 25 மாதங்களாக ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்படவில்லை. இது தமிழக அரசின் எந்தத் துறையிலும் நடக்காத அநீதி என்று கண்டித்தார்.  அதிகாரிகளுக்கு 40% ஓய்வூதிய உயர்வு வழங்கிய நிலையில், பிற தொழிலாளர்களுக்கு வெறும் 15% உயர்வே வழங்கியது பாரபட்சம். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2.57 பெருக்கல் காரணியைப் பயன்படுத்தி ஓய்வூதியம் மாற்றியமைக்க வேண்டும்;  அகவிலைப்படி: உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஓய்வூதியர்களுக்கு முழு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. 2016க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு 203%, பின்பு ஓய்வுபெற்றவர்களுக்கு 33% மட்டும் வழங்குவது நியாயமற்றது;  மருத்துவப் பலன்கள்: குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850, அதிகபட்சம் ரூ.1,12,500 ஆக உயர்த்த வேண்டும். தற்போதைய மருத்துவப்படி ரூ.100-ஐ ரூ.300 ஆக உயர்த்தி அனைத்துக் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  தனியார்மயத்திற்கு எதிர்ப்பு  சென்னையில் ஐந்து போக்குவரத்துக் கழக பணிமனைகளை தனியாருக்கு வழங்கி ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து இயக்குவதை கண்டித்தார். “கிராமப்பகுதிகளில் நஷ்டம் எனத்தெரிந்தே மக்கள் நலனுக்காக பேருந்துகளை இயக்குகின்றோம். இது சமூகப் பொருளாதாரம், நஷ்டமல்ல” என்றார்.  மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆகஸ்ட் 18 முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தலைமையகங்களிலும் பணியில் உள்ள தொழிலாளர்களும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தமிழகத்தின் அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் சங்க வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  பேட்டியின் போது சம்மேளனப் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் வி.சசிகுமார், துணைத்தலைவர் ஏ.பி.அன்பழகன், சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன் ஆகியோர் உடனிருந்தனர்.