tamilnadu

ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித்  தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக. 7 - ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு நீதிபதிகள் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தனர். தமிழக அரசுத் துறைகளின் முக்கியத் தகவல்கள், திட்டங்களை, செய்தி ஊடகங்கள் வாயிலாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோரை அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி. சத்தியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல என்றும், இந்த நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு வியாழக்கிழமை (ஆக.7) தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என மனுதாரர் வாதத்தை முன்வைத்தார். பின்னர் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை என்றும், அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு நீதிபதிகள் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தனர்.