articles

img

போரின் வலியும் டோமாயி பள்ளியும் - தேனி சுந்தர்

போரின் வலியும் டோமாயி பள்ளியும்

டோட்டா சான் _ ஜன்னலில் ஒரு சிறுமி : உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு நூல். மாற்றுக் கல்வி குறித்த உரையாடல்களில் தவறாமல் இடம்பெறக் கூடியது. ஜப்பான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் புகழ்பெற்று விளங்கிய டெட்சுகோ குரோயாநாகி என்பவர் எழுதியது..


டோட்டா சான் என்னும் சிறுமியின் குறும்புகளை, சுட்டித் தனங்களை, கேள்விகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை வெளியேற்றி அனுப்புகிறது ஒரு பள்ளி. அவள் வெளியேற்றப்பட்டாள் என்பதை அறிந்தால் தன் மகள் வருந்துவாள் என்று உணர்ந்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே வேறொரு பள்ளியைத் தேடிச் செல்கிறாள் அந்தக் குழந்தையின் தாய். அப்படி அவர்கள் கண்டுபிடித்த புதிய பள்ளி தான் இந்த டோமாயி ஹாகுன் பள்ளி. பள்ளி நுழைவாயிலின் இருபுறமும் இருந்த மரங்களில் தெரிந்த பெயர்ப் பலகையே அவளுக்கு வியப்பூட்டுவதாக இருக்கிறது. அய்.. மரம் வளர வளர பெயர்ப் பலகையும் வளருமா என்று ஆச்சரியப் படுகிறாள். உள்ளே நுழைந்தால், அங்கங்கே கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள் இருக்கின்றன. எதற்காக அவை இங்கே நிற்கின்றன என்னும் கேள்வி இன்னும் அவளது ஆர்வத்தை தூண்டி விடுகின்றது. அங்கும் இங்கும் ஓடுகிறாள். இந்தப் பள்ளியிலும் அவளைச் சேர்க்க மறுத்து விட்டார்கள் என்றால் என்ன செய்வது என தாய்க்கு பதற்றம்.. தன் தவிப்பை மறைத்துக் கொண்டு அங்கிருந்த தலைமை ஆசிரியர் அறைக்கு குழந்தையை அழைத்துச் செல்கிறாள். அங்கே சோசாகு கோபயாஷி இருக்கிறார். அவர் தான் தலைமை ஆசிரியர். அவர்களை எழுந்து நின்று வரவேற்று, அமரச் செய்கிறார். என்ன நடக்குமோ என்ற பரிதவிப்பை கண்களில் பார்த்த கோபயாஷி, நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோம், குழந்தையை விட்டு விட்டு நீங்கள் செல்லுங்கள் என்று அந்தத் தாயிடம் சொல்கிறார். என்னிடம் எதுவும் சொல்ல வேண்டுமா? என்று டோட்டோ சானிடம் கேட்டார் கோபயாஷி. அந்த குழந்தை அவளுக்கு தெரிந்ததை எல்லாம், தன்னுள் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரிடம் சொல்கிறாள்.. சொல்கிறாள். சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அவள் நிறுத்தும் போது மட்டும் கோபயாஷி பேசுகிறார், “என்னிடம் வேறு எதுவும் சொல்ல வேண்டுமா??” இதுதான் அவர் பேச்சு. மீண்டும் மீண்டும் யோசித்து யோசித்து பேசுகிறாள்.. பேசுகிறாள்.. பேசிக் கொண்டே இருக்கிறா(ர்க)ள்..! மதிய உணவுக்கு நேரம் ஆனபோது தான் அவ(ர்க)ள் நான்கு மணி நேரம் பேசி இருப்பதை உணர முடிந்தது. ரயில் பெட்டியில் தான் தங்கள் வகுப்புகள் நடக்கப் போகின்றன என்பதை அறிந்து உற்சாகம் அடைகிறாள். விரும்பும் இடத்தில் அமரலாம். விரும்பும் பாடத்தை படிக்கலாம். அதுவும் அரை நாள் தான் இந்தப் பாடங்கள். மீதி நேரம் எல்லாம் வெளியில் தான். நேரடி விவசாயக் கல்வி , தைரியப் பயிற்சி, நீச்சல் விளையாட்டு, இசை, நடை பயிற்சி என விதவிதமான அனுபவங்கள். எனவே டோட்டோ சான் மட்டுமின்றி எல்லா குழந்தைகளும் வீட்டுக்கு தாமதமாகவும் பள்ளிக்கு சீக்கிரமாகவும் வந்து போக பழகி விட்டனர். அழுக்கு அல்லது பழைய உடைகளை அணிந்து வரச் சொல்வதை கேட்டு வியந்த பெற்றோர் பின்னர் படிப்படியாக பள்ளியின் செயல்பாடுகளை புரிந்து கொள்கின்றனர். மேஜிக் செய்பவர், நடனக்காரர், உளவாளி என பெரியவள் ஆனதும் என்னவாக மாற வேண்டும் என்கிற டோட்டோ சானின் விருப்பங்கள் மாறிக் கொண்டே இருந்தன. ஒருமுறை அவள் டோமாயி பள்ளியின் ஆசிரியராக வருவது தான் என் ஆசை என்று கோபயாஷிடம் கூறினாள். அவருக்கு அதைக் கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி.. தன்னுடைய பள்ளியின் முயற்சிகள் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருப்பதை எண்ணி உருகினார். ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே அந்த டோமாயி பள்ளியின் மீது இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீசப்பட்டது. கோபயாஷி கண் முன்பே டோமாயி பள்ளி எரிந்து போனது. அங்கு வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டோட்டோ சான் குடும்பம் மட்டும் தப்ப முடியுமா என்ன? எனவே அவளால் அந்தப் பள்ளியின் ஆசிரியராக முடியவில்லை. ஆனால் அவள் பெரியவள் ஆகி அந்தப் பள்ளியைப் பற்றி எழுதிய பிறகு தான் உலகமே டோமாயி பள்ளி குறித்து அறிந்தது. அதன் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றனர். அந்த குட்டி பெண் தான் இந்நூலை எழுதிய டெட்சுகோ குரோயாநாகி.! இந்நூலில் அவர் குறிப்பிடும் ஒரு சம்பவம் போதும், போரின் துயரை நாம் உணரவும் மற்றவர்களுக்கு உணர்த்தவும்..! ஒருமுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, போரின் காரணமாக ஊனமுற்றவர்களை பார்ப்பதற்காக, அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கல்வித் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு குழந்தை அக்குழுவில் இடம்பெற வேண்டும். டோமாயி பள்ளியின் சார்பில் டோட்டோ சான். என்ன செய்ய வேண்டும்? என்ன பேச வேண்டும்? எதுவும் தெரியாது. குழுவுடன் செல்கிறாள். மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் அறைக்கு சென்று அறிமுகம் செய்து, குழந்தைகளை சில பாடல்கள் பாடச் சொல்கிறார் ஒருங்கிணைப்பு செய்யும் ஆசிரியர். அந்த பாடல்கள் எதுவும் இவளுக்கு தெரியவில்லை. எனவே சேர்ந்து பாட முடியவில்லை. கண்ணில் நீர் பெருக்கெடுக்கும் நிலை. பேசாமல், ஒரு வீரரின் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவளும் கவனிக்கிறாள். நீ பாடவில்லையா? என்றும் அந்த வீரர் கேட்டு விட்டார். காயம் பட்டவர்களை பார்க்க வந்திருக்கிறோம். அவர்களை மகிழ்விக்கும் வகையில் டோமாயி பள்ளியின் குழந்தை நாம், ஒன்றும் பாடாமல் எப்படிப் போவது?? மற்றவர்கள் பாடி முடித்ததும், எழுந்து நின்று ஆசிரியரின் அனுமதிக்கு கூட காத்திராமல் ஒரு பாடலை பாடுகிறாள்.. என்ன பாடல் இது? ஒன்றும் புரியவில்லை ஆசிரியருக்கு.. ஆனாலும் தடுக்கவில்லை. அந்தப் பாடல் டோமாயி பள்ளியில் ஒவ்வொரு நாளும் மதிய உணவின் போது குழந்தைகள் பாடக் கூடியது. அதைக் கேட்ட, காயமுற்ற சில வீரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. அந்தக் குட்டிப் பெண்ணின் தலையில், தோளில் தட்டிக் கொடுக்கிறார் ஒரு வீரர். லேசாக சிரிக்கவும் செய்கிறார்.. ஆனாலும் அவருக்கும் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது..! குழந்தைக்கு புரியவில்லை, ஏன் அந்த வீரர் அழுகிறார்? குழந்தை சிந்திக்கிறாள். அவ்வீரரின் கண்களைக் கலங்கச் செய்தது எது? அவருக்கும் இவளைப் போல ஒரு சிறிய குழந்தை இருந்திருக்கலாம். அந்தப் பாடல் அவர் மனதைத் தொட்டிருக்கலாம். அவரது போர்முனை அனுபவம், இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளைக் கூட போர் காரணமாக உருவாகும் பஞ்சம் விட்டு வைக்காதே என்று உணர்த்தி இருக்கலாம். அல்லது இருக்கும் நிலைமை தெரியாமல் “மெல்லு மெல்லு.. உணவை நன்றாக மெல்லு..!” என்று இந்தக் குழந்தை பாடுகிறாளே என்ற எண்ணம் ஓடி இருக்கலாம்.. அல்லது போர் காரணமாக உண்ணுவதற்கு எதுவுமே இல்லாத நிலைமை வரப் போகிறதே என்று நினைத்து இருக்கலாம்.. இப்படிப்பட்ட குழந்தைகளைக் கூட விழுங்கப் போகிற கொடுமையான நிகழ்வு நடக்கப் போகிறதே என்று நினைத்து இருக்கலாம்.. இவை எதுவுமே தெரியாமல் தான் அந்தக் குழந்தைகள் காயம் பட்ட வீரர்களுக்காக பாடிக் கொண்டிருந்தனர்... அப்போதும் பசுபிக் பெருங்கடல் பகுதியில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது..