18 கோல்கள்... யாரும் நெருங்க முடியாது... உலகளவில் கவனம் ஈர்த்த வங்கதேச வீரர் அமீருல் இஸ்லாம்
21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த தொடரில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனிக்கு இது 8ஆவது உலகக்கோப்பை பட்டம் ஆகும். ஸ்பெயின் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், போட்டியை நடத்திய இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரு உலகக்கோப்பை விளையாட்டுத் தொடரை எடுத்துக் கொண்டால், அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணி வீரர்கள் கோல் அல்லது ரன்களில் முன்னிலை இருப்பார்கள். காரணம் ஒரு குறிப்பிட்ட வீரரின் சிறப்பான பங்களிப்பால், அவர் விளையாடும் அணி தான் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி அரையிறுதி அல்லது இறுதிக்கு முன்னேறும். இதுதான் விளையாட்டு உலகின் வரலாறு ஆகும். ஆனால் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் 17ஆவது இடத்தை பிடித்த வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த வீரர் அமீருல் இஸ்லாம் அதிக கோலடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 18 கோல்களுடன் அதிக கோலடித்த வீரர்கள் பட்டியலில் அமீருல் இஸ்லாம் முதலிடத்தில் உள்ளார். அதுவும் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு முதலிடத்தை பிடித்து மிரட்டியுள்ளார். இவருக்கு அடுத்து ஜான்டி (ஆஸ்திரேலியா), லீ (தென் கொரியா) ஆகியோர் 11 கோல்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளனர். முதலிடத்திற்கும் 2ஆவது இடத்திற்கும் 8 கோல்கள் வித்தியாசம் ஆகும்.
