games

விளையாட்டு

இந்திய அணியை பற்றி பேச கூடாதாம்! ஐபிஎல் அணி உரிமையாளரை மிரட்டும் கம்பீர்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் கம்பீர். பாஜக முன்னாள் எம்.பி.,யான இவர், பயிற்சியாளர் பணிக்கு வந்த பின்பு இந்திய அணி மிக மோசமான அளவில் திணறி வருகிறது. குறிப்பாக சொந்த  மண்ணில் கூட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகும் நிலைக்கு இந்திய அணி  சென்றுவிட்டது. இதற்கு கம்பீரின் பரிந்துரை பேரில் அறிவிக்கப்படும் அணி  தேர்வு மற்றும் அவரின்  மோசமான பயிற்சி தான் காரணம் ஆகும். இதனால் கம்பீருக்கு எதிராக நாடு முழுவதும் விமர்சனங் கள் மற்றும் இந்திய அணி பயிற்சியை விட்டு வெளியேறக் கோரி கண்டனக் குரல் தொடர்ச்சியாக கிளம்பியுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் தில்லி அணியின் உரிமையாளராக இருக்கும் பார்த்திவ் ஜிண்டால், தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்தியா மிக மோசமான அளவில் டெஸ்ட் தொடரை இழந்ததை கண்டித்து, “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை” என்று கூறினார். இது ஒரு சாதா ரண கருத்து தான். நாங்களும் ஐபிஎல் அணியை  கவனிக்கிறோம் என்று உத்தரவு போடாமல் ஒரு சிறிய ஆலோசனையாக கூறினார். உடனே கம்பீர்,”டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று எப்படி கூறலாம். இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. அனைவரும் தங்களது  வரம்புக்குள் இருப்பது முக்கியம். உங்கள் வரம்புக்குள் நாங்கள் தலையிடுவதில்லை. நீங்களும் எங்கள் வரம்புக்குள் தலையிடக் கூடாது” என மிரட்டும் நோக்கத்தில் கூறியுள்ளார்.  கம்பீரின் இந்த அடாவடி பேச்சுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். 

வெளியாட்கள் போல ஆலோசனை கூறும் கம்பீர்

சமீபத்தில், “ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 30 ஓவர்கள் வரை ஜெய்ஸ்வால் நிதானமாக ஆட வேண்டும். இதன்மூலம், அவர் தனது தனிப்பட்ட ஸ்கோரை 30 ஓவர்களுக்கும் மேலாகத் தக்கவைத்துக் கொண்டு ஒரு பெரிய சதம் அடிக்க முடியும்” என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் செய்தியாளர்  சந்திப்பில் கூறினார். ஜெய்ஸ்வால் இந்திய அணியின் தொடக்க வீரர். அவர் அணியில் தான் இருக்கிறார். டிரெஸ்ஸிங் ரூம் அல்லது பயிற்சியின் போது ஜெய்ஸ்வாலிடமே கம்பீர் தனது ஆலோசனையை கூறிவிடலாமே? ஏன் இதனை ஊடகங்கள் முன்னால் கூற வேண்டும்? என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025

இறுதிக்கு முன்னேறுமா சீனா?

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அரையிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து - பெல்ஜியம்,  சீனா - அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பரபரப்பாக நடைபெறும்  அரையிறுதியில் விளையாடும் 4 அணிகளும் அதிரடிக்கு பெயர் பெற்றவை என்பதால், 2 ஆட்டங்களும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நெதர்லாந்து அணியின் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் அந்த அணி வீராங்கனைகள் நடப்பு உலகக்கோப்பை சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மகளிர் ஹாக்கி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக கோல் (21) அடித்த நாடு என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளனர். இதனால் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

9ஆவது இடம்பிடிக்குமா இந்தியா?

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பதக்க பிரிவில் இருந்து வெளியேறியது. இத்தகைய சூழலில்  வியாழனன்று நடைபெற உள்ள 9ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.