கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினர்.
தென் கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியுடன் எதிர்கொண்டார்.
2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றில் ஜப்பானை சேர்ந்த உலகின் 26 ஆம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரியை, 21-15,21-10 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஒஹோரிக்கு எதிரான பல ஆட்டங்களில் தனது 12ஆவது வெற்றியை பெற பி.வி.சிந்து 37 நிமிடங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இஸ்ரேல் வீரர் மிஷா ஷில்பெர்மனை எதிர்கொண்டார். 33 நிமிடங்கள் தொடந்த இந்த போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-18,21-6 என்ற செட் கணக்கில் ஷில்பெர்மனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.