ஞாயிறன்று நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கொடுத்த எளிய கேட்சை இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சமூக வலைத்தளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முக்கியமாக விவசாய போராட்டம், காலிஸ்தான் போன்ற இனம் தொடர்பான அரசியல் சர்ச்சை கருத்துக்களும் வெளியாகியது. அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக ஒரு பக்கம் எதிர்ப்பு அலை வீசினாலும், அதை விட பலமடங்கு ஆதரவு அலை வீசியது. தற்போதைய நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிரான விமர்சனங்களை விட ஆதரவான கருத்துக்கள் அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் விவகாரம் போன்று கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது தொடர்பாக விமர்சன அலையில் சிக்கி அதிலிருந்து மீண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். இதுதொடர்பாக ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது,”கவலைப் படாதீர்கள் அர்ஷ்தீப் சிங் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்து வரக்கூடிய போட்டிகளில் கவனம் செலுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸும் அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.