2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில், இந்தியாவின் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
மகளில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி நியூசிலாந்தில் டவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கும். இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். முதல் போட்டியில் நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடும். அதனை தொடர்ந்து மார்ச் 5 ஆம் தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பூங்காவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எதிர்கொள்கின்றன. மார்ச் 6 ஆம் தேதி டவுரங்காவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.
ஐசிசியின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகியவை ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் 2017-20 இல் தங்கள் தர நிலையின் அடிப்படையில் போட்டிக்குத் தகுதி பெற்றன. நியூசிலாந்தில் இந்த போட்டிகள் நடப்பதால், அந்த நாடு தானாக தகுதி பெற்றது. இந்த போட்டி லீக் வடிவத்தில் விளையாடப்படும். இதில் பங்கெடுக்கும் எட்டு நாடுகளும் ஒரு முறை நேருக்கு நேர் மோதும். அதன் முடிவில் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் மார்ச் 30 ஆம் தேதியும், ஹாக்லி ஓவலில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 31ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டிகள் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும்.