games

img

கால்பந்தின் சகாப்தம் மறைந்தது....

“கியூபப் புரட்சியின் தளபதி மறைந்தார்; தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணியுங்கள்” என்ற செய்தியை தொலைக்காட்சியில் கேட்டதும் கியூபா நாடே உறைந்து போகிறது. அப்போது, கால்பந்து வீரர் ஒருவர் குலுங்கி குலுங்கி அழ தொடங்கினார். மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு கண்ணீர் வடித்த அந்த வீரர் வேறு யாருமல்ல, டீகோ மரடோனா.இம்மாதம் 30 தேதி தமது 61வது பிறந்த நாளை கொண்டாடவிருந்த ‘கால்பந்தின் கடவுள்’ மாரடோனா சுமார் 15 ஆண்டுகாலம் உயிருடன் இருந்ததற்கு முக்கிய காரணம் பிடல் காஸ்ட்ரோதான்.

‘கால்பந்தின் பிதாமகன்’ பிரேசிலின் ‘பீலே’ உள்ளிட்ட அனைவராலும் பாராட்டப்பட்ட மாரடோனா, மைதானத்திற்குள் பந்தை மார்புகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு செய்யும் வித்தைகளை பார்த்து பரவசம் அடையாத ரசிகர் கூட்டமே கிடையாது. மாரடோனாவின் ஸ்டைலுக்கு தனி மவுசு உண்டு. அவரது அசாத்திய திறமை உலகம் முழுவதும் கால்பந்து வீரர்கள், ரசிகர்களின் ஒட்டுமொத்த உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விட்டது.

34 ஆண்டுகளுக்கு முன்பு உலக கோப்பை கால்பந்து முக்கிய ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக  ஒரு கோல் விழுந்தது. அதுதான் கேப்டனாக மாரடோனா அடித்த முதல் கோல். அது தலையால் முட்டினாலும் கையில் பட்டு கோல் கம்பத்தில் விழுந்தது. இதற்கு இங்கிலாந்து வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்து மீடியாக்களும் மாரடோனாவை ‘சாத்தான்’ என்றும் திட்டி தீர்த்தது. “அது எனது கை அல்ல, கடவுளின் கை” என்று பதிலடி கொடுத்தார் மாரடோனா.இந்தப் போட்டியில் பிரிட்டிஷ் வீரர்கள் 7 பேரை கடந்து சென்று மாரடோனா அடித்த அந்த கோல் ‘மாயகோல்’ என்று கால்பந்து ரசிகர்களால் பாராட்டப்பட்டது. கண்ணைக் கவரும் விதத்தில் இருந்ததால் இந்த நூற்றாண்டின் மிகச் ‘சிறந்த கோல்’ விருதும் பெற்றது.

அந்த கோல் கால்பந்து வீரர்கள், ரசிகர்களோடு மட்டுமல்லாமல் கியூபா நாட்டின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை மிகவும் கவர்ந்தது. கோப்பையை வென்ற கையோடு தங்கள் நாட்டுக்கு வருமாறு மாரடோனாவுக்கு அழைப்பு விடுத்தார் பிடல் காஸ்ட்ரோ. உடனடியாக செல்ல முடியவில்லை என்றாலும் ஒரு ஆண்டு கழித்து 1987ஆம் ஆண்டு முதல் முறையாக விஜயம் செய்தார். அங்கு தனது மிகவும் புகழ்பெற்ற அர்ஜெண்டினா 10ஆம் எண் ஜெர்சியில் கையொப்பமிட்டு பிடல் காஸ்ட்ரோவுக்கு பரிசளித்தார் மாரடோனா. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. அன்று முதல் இருவருக்குமான நட்பு இணைபிரியா தோழமையாக மலர்ந்தது.இடதுசாரி கொள்கைகளில் மாரடோனா கொண்டிருந்த நாட்டம், பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட தலைவர்களோடு அவர் காட்டிய நெருக்கம் ஆகியவை அமெரிக்காவின் கண்களை உறுத்தியது. இதனால் பழி வாங்கவே காத்துக்கொண்டிருந்த அமெரிக்கா, தனது நாட்டில் நடந்த உலகக் கோப்பை தொடரில் பழிதீர்த்துக் கொண்டது.

கிரீசுக்கு எதிராக விளையாடிய போட்டிதான் மாரடோனா அர்ஜென்டினாவுக்காக கடைசியாக ஆடிய போட்டியானது. போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாக மாரடோனாவின் ரத்தப் பரிசோதன முடிவுகள் வர பாதியிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார் மாரடோனா. இங்கிருந்துதான் மாரடோனாவின் உடல்நிலை தடுமாறியது.2004ஆம் ஆண்டு உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட் கொண்டதால் அவரது உடல் எடை 127 கிலோவாக அதிகரித்தது. இதுவேஉயிருக்கும் ஆபத்தை விளைவித்தது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர். ரசிகர்களும் உலகம்முழுவதும் அவருக்காக பிரார்த்தனையும் செய்தனர். ஒருவழியாக உயிர் பிழைத்தார். ஆபத்துநீங்கவில்லை. உயிர் வாழ வேண்டுமென்றால் போதை மருந்து பழக்கத்திலிருந்து முழுமையாக விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

5 அடி 4 அங்குலம் உயரமே கொண்ட மாரடோனாவை கால்பந்தின் கடவுளாகவே ரசிகர்கள் போற்றி வந்தனர். இதனால் 1980களில் பணம் கொட்டும் எந்திரமாக உருவெடுத்தார். அதுவரைக்கும் அவரை வைத்து பல நூறு கோடி ரூபாய் லாபத்தை அள்ளிய தொலைக்காட்சி விளம்பர நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை.இந்த தகவலை அறிந்ததும் ஆபத்துக்கு உதவுபவன் தோழன் என்பதை கியூபா நாட்டின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ நிரூபித்துக் காட்டி உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். உயிருக்குபோராடிக் கொண்டிருந்த மாரடோனாவை கியூபாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்தார். ஹவானாவில் உள்ள மருத்துவமனையில் சுமார் ஆறு மாத காலம் தங்கி சிகிச்சையும் பயிற்சியும் கொடுக்க அனைத்து உதவிகளையும் செய்தார். இதன் விளைவு மிக விரைவில் குணமடைந்து உடல் எடையும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் கால்பந்துபயிற்சியில் களமிறங்கி தனது திறமையை நிரூபித்துக் காட்டினார். 2010ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.

நட்பின் இலக்கணமாக திகழ்ந்ததுடன் உயிரை மீட்டுத் தந்த பிடல் காஸ்ட்ரோ உடனான நட்புறவு பிடலின் மரணம் வரைக்கும் தொடர்ந்தது. அந்த உறவின் காரணமாக சிறிய தந்தை பிடல் காஸ்ட்ரோ என்று அழைத்தது மட்டுமல்லாமல் கியூப நாட்டு மக்களின் புரட்சி நாயகர்களான காஸ்ட்ரோவின் படத்தை தனது இடது காலிலும் “சே” குவேராவின் படத்தை தனது வலது கையிலும் பச்சைக் குத்திக் கொண்டார் மாரடோனா.அர்ஜெண்டினாவின் லூன்ஸ் நகர் பகுதியில் வசித்து வந்த செங்கல் தயாரிக்கும் ஆலைத் தொழிலாளி மாரடோனாவின் தந்தை. கிடைத்த வருமானம் குடும்பத்தை வழிநடத்த போதுமானதாக இல்லை. ஏழைகள் குடியிருக்கும் குடிசை நகரமான வில்லா பியோரிடன் பகுதியில் வளர்ந்தார். சிறிய அறை ஒன்றில் குடும்பத்தினர் 9 பேரும் தங்கியிருந்த போது வறுமையால் வாடினாலும் மழலைப் பருவத்தில் இருந்தே கால்பந்து மீது அதிக காதல் கொண்டவர் மரடோனா.

12 வயதில் பந்தை எடுத்து கொடுக்கும் பையனாக மைதானத்தில் வலம் தான் மாரடோனா, 1976 முதல் 97  வரை 21 ஆண்டுகள் கால்பந்து உலகில் பல்வேறு நிலையில் 490 ஆட்டங்களில் விளையாடி 311 கோல்கள் அடித்து அசத்தினார். சுமார் 19 ஆண்டுகாலம் அர்ஜென்டினா நாட்டுக்காக ஜூனியர், சீனியர் அணிகளில் 91 போட்டிகளில் 34 கோல்கள் அடித்துள்ளார். அதுமட்டுமன்றி 4 உலகக் கோப்பையிலும் விளையாடி இருக்கிறார்.தனது நீண்டநாள் தோழியை மணந்து கொண்ட அவருக்கு இரண்டு மகள்கள்.  இளைய சகோதரர்களும், மகன் டீகோ சிங்காராவும் கால்பந்து விளையாடி வருகின்றனர்.விளையாட்டு துறையோடு, இடதுசாரி சிந்தனையாளராக, அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் மாரடோனா தனது 60வது வயதில் நவம்பர் 26 ஆம் தேதி பிரியாவிடை பெற்றாலும் வரலாற்றில் நிலைத்து நிற்பார்!

===சி.ஸ்ரீராமுலு==

;