விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சினியாகோவா ஜோடி சாம்பியன்
138ஆவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் கடந்த ஜூன் 30 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்கியது. புல் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் மற்றும் அதிகளவில் பரிசுத்தொகை கொண்ட தொடரான விம்பிள்டன் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கலப்பு இரட்டை யர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இல்லாத சினியாகோவா (செக்குடியரசு), செம் (நெதர்லாந்து) ஜோடி, ஸ்டேபானி (பிரேசில்), சலிஸ்பெரி (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினியாகோவா - செம் ஜோடி 7-6 (7-3), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பட்டம் வென்ற சினியாகோவா - செம் ஜோடிக்கு ரூ.36.86 கோடி பரிசுத்தொகை அள்ளி யது. இரண்டாம் இடம் பிடித்த ஸ்டே பானி - சலிஸ்பெரி ஜோடி ரூ.13.05 கோடி பரிசுத்தொகை வென்றது. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் தரவரிசை இல்லாமல் இறுதிக்கு முன்னேறிய ஜோடிகள் (சினியாகோவா, செம் - ஸ்டேபானி, சலிஸ்பெரி) மற்றும் கோப்பையை வென்ற ஜோடி (சினியாகோவா, செம்) என்ற இரண்டு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் ஸ்வியாடெக் - அனிஸ்மோவா இன்று பலப்பரீட்சை
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், 13ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அனிஸ்மோவா மோதுகின்றனர். இருவரும் முதன்முறையாக விம்பிள்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். குறிப்பாக தனது டென்னிஸ் வரலாற்றில் முதன்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் அனிஸ்மோவா. ஸ்வியாடெக் 4 முறை பிரெஞ்சு ஓபனும் (2020, 2022, 2023, 2024), ஒருமுறை அமெரிக்க ஓபனும் (2022) வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2,571 கோடி அள்ளிய “எப்1” திரைப்படம் கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது
மற்ற திரைப்படங்களை விட விளையாட்டு சம்பந்தமான திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்று வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில், ஜோசப் கோசின்ஸ்கி இயக்கத்தில் கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான “எப்1” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஜூலை 7 நிலவரப்படி உலகளவில் சுமார் ரூ.2,571 கோடி வசூலித்துள்ளது. இதில் வட அமெரிக்காவில் மட்டும் சுமார் ரூ.960 கோடி வசூலாகி, நடிகர் பிராட் பிட்டின் சினிமா வாழ்க்கையில் இதுவே அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது. இப்படம் 50 வயதுகளில் உள்ள முன்னாள் “பார்முலா ஒன் (எப்1)” ஓட்டுநரான சன்னி ஹேய்ஸ், தனது நண்பருக்கும் அவரது போராடும் அணிக்கும் உதவ மீண்டும் பந்தயத்திற்கு திரும்புவதைச் சொல்கிறது. டேமன் இட்ரிஸ், ஜேவியர் பார்டெம், கெர்ரி காண்டன் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படத்தில், லூயிஸ் ஹாமில்டன், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பெர்னாண்டோ அலோன்சோ போன்ற உண்மையான எப்1 கார்பந்தய வீரரர்களும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரண்டிங் வாய்ஸ்
சிராஜ் ஒரு ஜோக்கர் சிராஜ் ஒரு ஜோக்கர். அவர் யாரையும் கிண்டல் செய்ய மாட்டார். ஆனால் பலரும் அவரை கிண்டல் செய்து சிரிப்பார்கள். அவரை எப்போது கிண்டல் செய்தாலும் சிராஜ் சிக்கிக் கொள்வார். பண்டும் சிராஜும் ஒரே மாதிரி தான். அவர்கள் இருவரும் இருந்தால் டிரெஸ்ஸிங் ரூம் சிரிப்பாக இருக்கும். குறிப்பாக சிராஜுக்கு டிஎஸ்பி பதவி கிடைத்தது. அதை வைத்து டிரெஸ்ஸிங் ரூமில் பலரும் சிராஜை கிண்டல் செய்வார்கள். அப்போது சிராஜ் எங்களைப் பார்த்து, ஹைதராபாத் வந்து பாருங்கள். நான் உங்களை ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்லி எங்களை மிரட்டுவார். - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (வெளிநாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்)