facebook-round

img

துளி நீர் இல்லா துயரக் கண்ணீர் - ஆர்.பாலகிருஷ்ணன்

அத்துமீறிப் போகிறார்கள்
ஐந்தடி, ஆறடி மனிதர்கள்..
அளவற்ற ஆகாயம் 
ஆத்திரத்தில் கொதிக்கிறது...

காடு கொன்று நாடாக்கியது 
வாழ்வாதாரம்..
காடுகளை 
நாற்காலி மேஜைகளாய்
கை துடைக்கும் காகிதமாய் 
கனிமம் சுரண்டும் களங்களாய் 
மாற்றியது சேதாரம்.

மணல் திருடி விற்ற
ஆறுகள் செத்து 
'காரியம்' கூட
முடிந்து விட்டது.

செத்த பாம்புகளைப் போல
நகராமல் கிடந்தன
நதிகள்.

உருகும் பனிக்கடல்...
ஓங்கிய சிகரங்களில்
உருளும் பனித் தலைகள்...

திடீரென்று 
கோரப் புயல் மழையின்
ஊழித் தாண்டவம்.
மலைகள் நழுவி 
நகரும் படகாக...
வீடுகளில் புகுந்து 
வீதிகளில் வெள்ளம்.

புவி வெப்பம்...
பூமியில் 
தாறுமாறாய்
தட்ப- வெப்பம்.

பூமியின் முதுகெல்லாம்
வாகனச் சுமை..
அழுக்குப் புகை..
அமிலமாய்ப் பொழிகிறது 
அவ்வப்போது மேகம்..

பாளம் பாளமாய்
வெடித்துக் கிடந்தன
தவித்த குளங்களின்
தகித்த வாய்கள்...

முல்லையும் குறிஞ்சியும்
முறை கெட்டன..
நிலத்தடி நீரை 
உறிஞ்சிய 
ராட்சத நாவுகள்
கடைசியில் 
தவித்த வாய்க்கு 
தண்ணீர் கேட்டு 
பூமியின் கால்களில் 
புரண்டு அழுதன.

அண்டவெளியின்
அகன்ற தெருவில் ...
அண்டைக் கோளமும் 
அறியாத தனிமையில்..
முக்கி அழதார்கள் 
மனிதர்கள்.

அவர்களின்
துயரக் கண்களில் 
துளி நீர் இல்லை.

-Balakrishnan R

;