நிகழ்வு 6: முத்தமிழ் அறிஞர் கலைஞர்
அப்போது நான் டில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்தேன்.
சிந்துவெளி நாகரிகம் நிலவிய பகுதிகளில் "கொற்கை வஞ்சி தொண்டி" உள்ளிட்ட ஏராளமான சங்கத் தமிழர் அடையாள இடப்பெயர்கள் இப்போதும் புழக்கத்தில் இருப்பதை கண்டு பிடித்து இருந்தேன். ஆனால் நான் அதுபற்றி உடனே செய்தியோ கட்டுரையோ வெளியிடவில்லை. இதை பல்வேறு துறைச் சான்றுகளால் வலுவாக நிறுவி எனக்கு நானே உறுதி செய்த பின்னால் தான் இது பற்றி பேசவோ எழுதவோ வேண்டும் என்று மேலும் மேலும் புதிய சான்றுகளைத் தேடித் திரட்டி வந்தேன்.
2007 ஆம் ஆண்டு. உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் முடிந்திருந்த நேரம் . அப்போது ஒரு முறை சென்னை வந்திருந்த போது எனது நண்பர் மா. ராஜேந்திரனிடம் ( தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர்) பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் சிந்துவெளியின் "கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்" பற்றி கலைஞரிடம் சொல்ல வேண்டும் என்ற யோசனை இருவருக்கும் தோன்றியது. இது முன் கூட்டி திட்டமிடப்படாதது. எதார்த்தமாக பேசிக்கொண்டு இருக்கும் போது தான் திடீரென்று இந்தப் பேச்சு வந்தது. மறுநாளே சந்திக்கும் நேரம் உறுதி செய்யப்பட்டது. முதல்வர் கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் எனது மடிக்கணினி மற்றும் அச்சிடப்பட்ட வரைபடங்களுடன் எனது ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்த புதிய தரவுகளை அவரிடம் விளக்கினேன்.
"புதிய செய்திகளாக இருக்கிறதே" என்றார். இதைப் பெரிய திரையில் பல அறிஞர்களுக்கும் வரைபடமாக காட்ட வேண்டும். அவர்களின் கருத்தையும் அறிய வேண்டும் என்றார். அருகிலிருந்த திரு. சண்முக நாதனிடமும் இதுபற்றி அவர் குறிப்பிட்டார்.
எனது புதிய தரவுகள் கலைஞருக்குள் எத்தகைய உணர்வை அளித்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்தச் சான்றுகளை பல அறிஞர்களும் கூடிய அவையில் விவாதிப்பது நல்லது என்று அவர் கருதுகிறார் என்பது புரிந்தது. கண்ணகி', பூம்புகார் , வஞ்சி , மதுரை, வன்னி, பாரி, காரி, ஓரி போன்ற ஏராளமான சங்க இலக்கிய அடையாளங்கள் சங்கிலித் தொடராக நமது கூட்டு நினைவில் நம்மோடு பயணிக்கின்றன என்று நான் சொன்னதும் " வியப்பாக இருக்கிறது" என்றார்.
நன்றி சொல்லி விடை பெற்ற நான் மீண்டும் அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்கள் 2009 பாராளுமன்றத் தேர்தல் என்ற எனது பணிப்பொறுப்புகளில் முற்றிலுமாக மூழ்கிப் போனேன். கலைஞர் சொன்ன மாதிரி அப்படி ஓர் உரையாடலை திட்டமிட இயலவில்லை.
ஆனாலும் 2010 ஆம் ஆண்டு கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி பற்றிய ஆய்வரங்கில் ஆய்வுரை நிகழ்த்த அழைக்கப்படுவேன் என்று அப்போது நான் எதிர்பார்க்கவில்லை.
இதற்கிடையே நான் 2009 இல் புற்றுநோய்க்கு ஆளாகி அறுவை சிகிச்சை அதைத் தொடர்ந்து வேதி மருத்துவம் ( கீமோதெரபி) பெற்று அப்போது தான் மீண்டிருந்தேன். கோவை செம்மொழி மாநாடு தான் நான் சிகிச்சை முடிந்த கையோடு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்வு.
எத்தனை வியப்புகளை தனக்குள் அடைகாக்கிறது இந்த வாழ்க்கை!
( தொடரும்)
Balakrishnan R