facebook-round

img

அரசியல் சாசனத்தை அவமதிப்பவரை வெளியேற்றுங்கள் - சு.வெங்கடேசன் எம்.பி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது சு.வெங்கடேசன் எம்.பி பேசிய உரை.
 
அவைத்தலைவர் அவர்களே, வணக்கம்.
மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் தனது உரையில் உரிமைகளையும், கடமைகளையும் பற்றி விளக்கியிருந்தார். அதுசார்ந்த கருத்துக்களை நான் பதிவிட நினைக்கிறேன்.

நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். எனது வீட்டின் உரிமையாளருக்கென்று உரிமைகளும் கடமைகளும் உண்டு. வீட்டின் நிலமும் கட்டிடமும் அவருடைய சொத்து. அவரது உரிமையில் நான் தலையிடுவதில்லை . அந்த உரிமையை மதிக்கிறேன்.

என்னைப் போலவே தமிழகத்தில் ஒருவர் வாடகைவீட்டில் குடியிருக்கிறார். ஆனால் அவர் வாடகை செலுத்துவதில்லை. அவருக்கு சட்டம் அந்த சலுகையை வழங்கியுள்ளது. ஆனால் அவரோ வீட்டின் உரிமையாளரின் உரிமையை நிராகரிக்கிறார். உரிமையாளரின் தீர்மானத்தை திருப்பி அனுப்புகிறார். நான் யாரைப்பற்றி குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

குற்றவாளிகளின் தண்டனையை குறைக்கவும், ரத்துசெய்யவும் அதிகாரம் கொண்ட ஒருவர் மக்களாட்சியின் அதிகாரத்தை குறைக்கவும், ரத்து செய்யவும் முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
ஆறரைக்கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட அவையின் தீர்மானத்தை திருப்பி அனுப்புவதும், ”ஏழை மக்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம்” என்று கருத்து கூறுவதும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும்.

நீட் தேர்வுக்கு எதிராக இந்த அவையில் நாங்கள் விடாது குரல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறோம். எங்கள் குரலுக்கு நீங்கள் மதிப்பளிப்பதேயில்லை. ஆனாலும் தமிழகத்தின் குரல் ஓயப்போவதில்லை.

டிசம்பர் மாதம் காசியில் நிகழ்சி ஒன்றில் பேசிய பிரதமர் அவர்கள் காசியைப் பற்றி கூறும் போது, “காசியை வெறும் வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. உணர்வுகளின் மூலமே வெளிப்படுத்த முடியும், அங்கு உண்மையே பண்பாடு, அன்பே பாரம்பரியம்” என்று கூறினார்.

பிரதமரின் அதே வார்த்தைகளால் இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன். தமிழகத்தை வெறும் வரைபடத்தைப் பார்த்து நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. மூவாயிரமாண்டு முற்போக்கு பாரம்பரியமும், சமத்துவ சிந்தனையும், சமூக நீதி கோட்பாடும் விளைந்த நிலம் அது. அந்த நிலத்திலிருந்து தொடர்ந்து எதிரொலிக்கும் குரலை நீங்கள் நசுக்கி இன்பம் காண்கிறீர்கள். 

பிரிட்டிஷ் ஆட்சியில் கூட மாநிலத்தின் பிரதிநிதிகள் டில்லி அதிகாரிகளை சந்திக்க பத்து நாட்கள் காத்திருந்ததாக நான் படித்ததில்லை. ஆனாலும் காத்திருந்து நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
கேட்பதால் எங்களை அதிகாரமற்றவர்களாகவும், தருவதால் உங்களை அதிகாரம் படைத்தவர்களாகவும் நீங்கள் கருதிக் கொள்கிறீர்கள். 

கேட்பதும் ஏற்பது ஒரு உரையாடலின் இருபகுதிகள். மாநிலமும் ஒன்றியமும் சம அதிகாரம் கொண்ட இரண்டு தட்டுக்கள். அதைத்தான் அரசியல் சாசன சொல்கிறது. அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குரலல்ல, இந்திய மாநிலங்களின் குரல். 

இந்திய அரசியல் சாசனத்தின் குரல், அதற்க்கு செவிசாயுங்கள், செவிசாய்க்க மறுப்பவரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள்.