அவர்கள் மின் விளக்கை
கண்டுபிடித்தார்களா - இல்லை
தொலைபேசி கண்டுபிடித்தார்களா?
மோட்டாரை கண்டுபிடித்தார்களா
நீராவி எஞ்சின் கண்டுபிடித்தார்களா?
அவர்கள் அறிந்ததெல்லாம்
காமதேனு, காளை மாடு
கோமியமும் கோசாணமும்
கொள்ளுத் தாத்தாவுக்கு
பல்லுடைக்கும் கொழுக்கட்டை
ஆனால், மோட்டாரைக்கூட
கண்டுபிடிக்காத அவர்கள் தான்
சக்கரத்தைக் கண்டுபிடிக்காத
அந்த சமர்த்தர்கள் தான்
முன்பு கடப்பாரை கண்டறிந்தார்கள்
இப்போது புல்டோசரைக்
கண்டறிந்துள்ளார்கள்
அவர்களுக்கு இப்பவும் தெரியாது
துப்பாக்கி முனைகளுக்கு எதிராக
இன்குலாப்பை கண்டறிந்தவர்கள்
குதிரைகளுக்கும் சாட்டைகளுக்கும்
மாற்றாக ஜெய் ஹிந்த் முழக்கமும்
கண்டறிந்தோர் இவர்கள் தானென
அவர்களுக்குத் தெரியாது... பாவம்!
ஹரஹர மகாதேவ்களுக்கு எதிராக
ஆஸாதியை முழங்குவோம்
ஜெய் ஸ்ரீராமுக்கு மாற்றாக
ஜெய் பீம் முழங்குவோம்
புல்டோசர்களுக்கு எதிராக
இன்குலாப் முழக்கம் எழுப்புவோம்!
அப்படியானால் புல்டோசருக்கு?
கொஞ்சம் பொறுங்கள்...
அவன் கண்கள் சிவக்கட்டும்
இடிமுழக்கமென எங்கிருந்தாவது
அந்த வெடித்த குரல் வரும்!
- சூர்யா, சென்னை