அவர் குறித்து பகிர்வதற்கும்
வியப்பதற்கும் எல்லோருக்கும்
ஏதோவொன்று இருக்கிறது..
ஆந்திர பிராமண குடும்பத்தில்
பிறந்த நான் சூஃபி இஸ்லாமை
தழுவிய ஒரு தந்தைக்கும்,
மைசூர் ராஜ்புத் குடும்பத்தைச்
சார்ந்த ஒரு தாய்க்கும் பிறந்த
ஒரு பெண்ணை திருமணம்
செய்திருக்கிறேன் எனில்
எங்கள் பிள்ளைகளை நீங்கள்
யாரென்று சொல்வீர்கள் என
நாடாளுமன்றத்தில் அவர்
எழுப்பிய ஆழமான கேள்வியும்,
ஒரு மதத்தை பின்பற்றுவதும்
கடவுளை தேர்வு செய்வதும்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட
உரிமையாதலால் தான்
அரசியலுக்கும், நம்பிக்கைக்கும்
இடையில் தெளிவானதொரு
லட்சுமண கோடு வரையப்
பட்டிருக்கிறது. குறுகிய அரசியல் நலனுக்காக யாரும் அதை
கடப்பதை ஏற்றுக் கொள்ள
முடியாதென ராமர் கோவில்
திறப்பு விழாவின் போது
அளித்த நுட்பமான விளக்கமும்
அவரது அறிவுக் கூர்மையின்
அடையாளங்கள்..
கடவுள் குறித்த 'தசாவதார'
நம்பிக்கையை இயக்கவியல்
பின்புலத்தோடும் பரிணாமவியல்
பார்வையோடும் அவர் விளக்குவதை
ஆன்மீக நம்பிக்கையாளர்களும் கூட
ஆச்சரியத்தோடு கேட்பார்கள்..
யெச்சூரி நாடாளுமன்றத்தில்
பேசப்போகிறார் என்றால்
மறக்காமல் சொல்லுங்கள்
நான் வந்து கேட்க வேண்டும்
என மூத்த வழக்கறிஞர் பராசரன்
சொல்வதை நினைவு கூர்வார்
தோழர் டிகேஆர்..
மொத்த அவையையும் கட்டிப்
போடும் ஆற்றல் வாய்ந்த
பேச்சுத்திறன் அவருக்கிருந்தது..
கோவை செம்மொழித் தமிழ்
மாநாட்டில் மொழி குறித்த
மார்க்சீய கண்ணோட்டத்தை,
பண்பாட்டு போரில் மொழியின்
பாத்திரத்தை விளக்கிய அவரது
உரையை கலைஞர் உள்ளிட்ட
மொத்த மாநாடும் கேட்டு வியந்தது..
ஐமுகூ அரசு இருந்த போது
உலகில் ஒரு பொருளாதார
நெருக்கடி எழுந்த போது
இந்தியாவில் பெரிய பாதிப்பு
உருவாகாதற்கு காரணம்,
சர்க்கரை நோயாளிகளுக்கு
அதன் அளவை கட்டுப்படுத்த
போடும் இன்சுலினைப் போல
இந்திய பொருளாதாரத்திற்கு
போட்டிருக்கிறோம் என அன்றைய
நிதியமைச்சர் சிதம்பரம்
சொன்னபோது, அதை போட்ட
மருத்துவர்கள் கம்யூனிஸ்டுகளே
என சிரித்துக் கொண்டே சொன்ன
சாதுரியத்திற்கு சொந்தக்காரர்
தோழர் சீதாராம் யெச்சூரி..
திருச்சி அரசியல் மாநாடு
மும்பை உலக சமூக மாமன்றம்
கட்சி மாநாடுகள், கருத்தரங்கங்கள்
மாநிலக்குழு கூட்டங்கள் என
ஒவ்வொரு முறையும் அவரது
உரையை கேட்கும் போதும்
புதிய கண்ணோட்டத்தை
உணர்த்திக் கொண்டிருந்தது..
குன்னூர் பாஸ்டியர் ஆய்வகம்
உதகை போட்டோ பிலிம்ஸ்
அருவங்காடு தொழிற்சாலை என
பிரச்னைகள் எழும்போதெல்லாம்
அரசின் கொள்கையை கண்டித்து
நாடாளுமன்றத்தில் நடைபெறும்
போராட்டங்களைப் போலவே
விளைவுகளை எதிர்த்த களப்
போராட்டங்களும் முக்கியமானது
என வர்க்க அரசியலோடு
ஊக்குவித்த உன்னதமானவர்..
இளைப்பாருங்கள் தோழர்
நீங்கள் விதைத்ததை
நாங்கள் பாதுகாக்கிறோம்
பொதுவுடமை மலர் பூக்கட்டும்..
RedSalute to the Crusader of
Communist Party of India (Marxist)
- ஆர்.பத்ரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்