சர்வதேச வானியல் கழக உறுப்பினர் ஒருவரின் அறிக்கை
சந்திரயான் 3-இன் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வெற்றி என்று அறிவித்து விட்டு, லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு தன்னிச்சையாக, மனம் போன போக்கில் 'சிவசக்தி' எனப் பெயரிட்டது துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து கேள்வி எழுப்பும் அறிவியலர்களை எதோ இந்தியர்களுக்கும் இந்து மதத்துக்கும் நமது பண்பாட்டின் மேன்மையை பறைசாற்றுவதற்கும் விரோதமானவர்கள் என போலியாக கட்டமைக்கப்படுகிறது.
2008 நவம்பர் 14 அன்று சந்திரயான் 1-இன் ‘மூன் இம்பாக்ட் ப்ரோப் நிலவில் மோதி இறங்கிய இடத்தை ஜவஹர் புள்ளி என்று அறிவித்த போது ஏன் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை என்றும் கேள்விகளைத் தொடுக்கிறார்கள்.
முதலில் கோள்களில் பெயர்களை எப்படி சர்வதேச வானியல் கழகம் சுட்டுகிறது என்ற விதிமுறையைப் புரிந்து கொள்வோம்.
அண்மைக் காலம் வரை ஐரோப்பிய வானவியலாளர்கள் வைத்ததே பெயர் என்ற நிலைமை இருந்தது. ஆனால் சர்வதேச வானவியல் கழகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உலகின் பல்வேறு பண்பாடுகளையும் மதிக்கும் வகையில் வான் பொருள்களுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். சர்வதேச வானவியல் கழகத்தின் துவக்க உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று.
இந்தக் கழகம் ஏற்படுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில், வியாழன் கோளுக்கு அருகே சூரியனை சுற்றிவரும் சிறுகோள்களுக்கு புராண இதிகாசங்களில் உள்ள பெயர்களையும், கண்டுபிடிப்பாளர் பெயர்களையும், புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் பெயர்களையும் வைக்கலாம். ஆனால் நூறு ஆண்டுகளுக்கும் குறைவான வரலாறு கொண்ட தனிநபர்கள் அல்லது நிகழ்வுகளின் பெயர்கள், வணிகப் பெயர்கள், செல்லப் பிராணிகளின் பெயர்கள் அனுமதிக்கப்படாது.
இதன் தொடர்ச்சியாக 1951இல் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோளுக்கு (2211) ஹனுமான் என்றும், 1957இல் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோளுக்கு (2307) கருடா என்றும், 1978இல் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோளுக்கு (2415) கணேஷ் என்றும் பெயர் வைக்கபட்டுள்ளது. அவ்வளவு ஏன், 1993இல் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோளுக்கு (13117 ) பாண்டிச்சேரி என்றும் பெயர் வைத்துள்ளனர். அதுபோல ராமன் ராமனுஜன் போன்ற பெயர்களும் உண்டு. .
அதே போல வெள்ளிக்கோளின் தரைப்பரப்பில் பெண் தெய்வங்கள் மற்றும் பெண் ஆய்வாளர்களின் பெயர்களைச் சூட்டுவது என்பதுதான் விதி. அதன் அடிப்படையில் வெள்ளியின் மிகப்பெரிய நில அமைப்பு ஒன்றுக்கு லக்ஷ்மி பிளானம் (பீடபூமி) என பெயர் இட்டுள்ளனர். சமீபத்தில் பூனேவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் கேலக்சி பெரும் கொத்து ஒன்றை கண்டுபிடித்தது. அதற்க்கு சரஸ்வதி என்று பெயரிட்டனர் - அதுவும் சர்வ தேச விதிமுறைகளுக்கு உட்பட்டது. பெரும் நதிகளின் பெயர்களை கேலக்சி பெரும் கொத்துகளுக்கு வைப்பார்கள்.
ஆக, இந்தியக் கடவுளர் பெயர்களும், இந்தியாவுடன் தொடர்புடைய பெயர்களும் ஏற்கெனவே பல முறை வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி நாம் கேள்வி எழுப்பவில்லை.அவையெல்லாம் விதிமுறைகளின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்கள். அவற்றை வரவேற்கிறோம்.
நிலவைப் பொறுத்தவரையில், மறைந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலான பிரபல விஞ்ஞானிகள், வானவியல், கோளியல், விண்வெளி அறிவியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய, அத்துறையில் கணிசமான பங்களித்த விஞ்ஞானிகள், என்ஜினியர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பெயர்களை வைக்கலாம். உயிரிழந்த விண்வெளி வீரர்கள் பெயர்களை வைக்கலாம். அல்லது வானிலை அல்லது மன நிலை சார்ந்த பெயர்கள் வைக்கலாம்.
எடுத்துக்காட்டாக அப்பல்லோ 11 தரையிறங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி 'அமைதிக் கடல்' (Sea of Tranquility) எனவும் தரையிறங்கிய புள்ளி ‘அமைதித் தளம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கிரேட்டர் எனப்படும் கிண்ணக்குழிகளுக்கு ஆரியபட்டா, ஹோமி பாபா, சி.வி. ராமன் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கல்பனா சாவ்லா பெயரில் கிண்ணக்குழி ஒன்றுக்கு சாவ்லா எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது வான் பொருட்களுக்கு பெயரிடலில் வெறும் கிரேக்க புராணப் பெயர்களை மட்டும் பயன்படுத்துவதும் இல்லை. இந்தியப் பண்பாட்டுப் பெயர்கள் ஒதுக்கப்படுவதும் இல்லை.
சிவசக்தி எனும் பெயர், நிலவின் பெயர் வைக்கும் சர்வதேச விதிகளுக்கும் முறைமைக்கும் முற்றிலும் விரோதமானது. இதிகாசம், புராணம், நம்பிக்கை சார்ந்த பெயர்களை நிலவில் வைக்கக்கூடாது என்பது தான் விதி. வேறு கோள்களில் அதற்கு இடம் உண்டு; அங்கு இந்திய பண்பாட்டுப் பெயர்கள் உள்ளன. நமது விண்வெளி ஆய்வுப்பணிகள் மேலும் சாதிக்கும்போது அதுபோன்ற பெயர்களின் எண்ணிக்கை அங்கும் கூடும்.
சர்வதேச வானியல் கழகம் தற்போது உள்ள விதிகளின் அடிப்படையில் சிவசக்தி என்ற பெயரை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விடுவதற்கான வாய்ப்புதான் உள்ளது. விதிமுறையை மீறி நாம் செயல்பட்டு, அந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டால் என்னவாகும்? விதியை மீறினோம் என்பது மறைக்கப்பட்டு, இதோ பார் மேலை நாட்டினர் - பிற மதத்தினர் - நமது பண்பாட்டை மதிக்கவில்லை என்று போலியாக குற்றம் சாட்டி வெறுப்பை விதைக்க வழிவகுக்கும். அது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு நமது நாட்டில் அரசியல் செல்வாக்கைப் பெருக்கப் பயன்படலாம்; ஆனால் சர்வதேச அரங்கில் தனிமைப்பட்டுப் போவோம்.
இந்திய மக்கள் மட்டுமின்றி உலக அளவில் அனைவரும் பெருமிதத்தோடும் களிப்போடும் கண்ட இந்த பிரமிப்பு மிக்க சாதனையை குறிப்பிட்ட ஓர் அரசியல் நிறுவனம் வெறுப்பை விதைப்பதற்கான அரசியல் செய்வது வேதனை.
அப்துல் கலாம் தான் ஜவஹர் என்ற பெயரை பரிந்துரை செய்தார் என்கிறார் அன்றைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர். விதிமுறைப்படி இல்லாத இந்த பெயரை சர்வதேச வானியல் கழகம் ஏற்கவில்லை. எனவே ஜவஹர் என்ற பெயரை மட்டும் ஏற்றுக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது இந்தியா தரையிறங்கியுள்ள புள்ளியை சந்திரயான் போன்ற ஆய்வுகளுக்கு உத்வேகம் கொடுத்த அப்துல் கலாம், இஸ்ரோவை வளர்த்து எடுத்த யுஆர் ராவ், சதிஷ் தவான் போன்றவர்களின் பெயர்கள் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஏன், பாஸ்கராச்சாரியாவின் மகள் கணிதவியலாளர் லீலாவதி எனப் பெயர் வைத்திருந்தால் எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும்!
(முற்காலத்தில் கலிலியோ, ஆரியபட்டர், அண்மையில் ஒப்பன்ஹைமர் போன்ற அறிவியல் அறிஞர்கள் தமது அறிவியல் சார் கருத்துக்களை கூறியதற்காக தண்டிக்கப்பட்டனர். கடும் துன்பங்களுக்கு ஆளாயினர். அதுபோல நானும் இன்றைய அச்சுறுத்தல் சூழலில் சிக்கலில் மாட்ட விரும்பவில்லை. இதுநாள் வரை ஆளும் அரசு குறித்து அறிவியல்ரீதியாக விமர்சனம் செய்வதில் பெரும் தயக்கம் காட்டியது இல்லை என்றாலும், இன்று உள்ள அராஜக சூழலில் பெயரைக் கூற விரும்பவில்லை.)
- கட்டுரையாளர் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆய்வாளர். ஹிந்தி மொழியில் வெளியான அறிக்கையின் தமிழ் வடிவம்.