facebook-round

img

நல்லவனே. "நாகரிகமாக" நடந்து கொள் நான் சிந்து- ஆர்.பாலகிருஷ்ணன்

எத்தனை முறை நான்
என் சுவரில் எழுதுவேன்
உன்னை...
மீண்டும்... மீண்டும்..

Inspired by Valluvar
 

1

கி.மு 1900

நான்
சிந்து.

ஊர்வது தான்
ஊரா?
நகர்வது தான்
நகரமா?
"இல்லிருத்தல் முல்லை"
எனக்கு மட்டுமா?

தரையில் நீர்கசியாமல்
தார்பூசிய குளியல் குளம்.
ஆயினும்
குளிப்பது யார்?

தெருக்களில்
எங்கும் செழிப்பு!
வீடுகளில்
எங்கே சிரிப்பு?

அவர்கள்
முதலில் வணிகர்கள்
முடிந்தால் கணவர்கள்.

"முந்நீர் வழக்கம்
மகடுவோடு இல்லை"

வறுமைக் கோட்டிற்கு
வைத்தியம் இருக்கிறது.
வெறுமைக் கோட்டிற்கு?

பைத்தியம் பிடிக்கிறது.

'சுமேரியா'க் காய்ச்சலில்
சோர்ந்தன வீடுகள்.

வீட்டுக்கொரு சிந்து
வெடித்து அழுது
வடித்த கண்ணீரில்
சாக்கடைகள் நிறைந்தன.

சிந்துவெளியில்
வெள்ளப்பெருக்கு.

குளியல் அரங்குகள்
கண்ணீரில் மூழ்கியது.

நதி உடைந்தது.
நகரம் கரைந்தது.
நாகரிகம் புதைந்தது.

2

கி.மு 600

நான்
சிந்து.

நான் இப்போது
எங்கே இருக்கிறேன்?
ஏன் இவர்கள்
அழுகிறார்கள்?

"நீரின் வந்த
நிமிர்பரிப் புரவிகள்
காலின் வந்த
கருங்கரி மூடைகள்...

இருந்தும்
ஏன் இவர்கள்
முகங்களில்
கவலையின்
கோடுகள்..?

"சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழி"யில்
கண்ணீர் விழிகள்.

பட்டினப்பாலை.

பட்டினம் என்பது
பாலையா?

பாலை என்பது
வனமா? மனமா?

பூம்புகார் ஏன்
அழிந்தது?
பூவையரின்
"புகாரால்?"

"வடிகால்" இன்றி
வடித்த கண்ணீர்
"புகாரை" இழுத்துப்
போட்டது கடலில்.

"உறை"யூர் ஏன்
உறைந்து ஒழிந்தது?
மனைவிகள்
தூற்றிய
மண்மூடி?

கொற்கை நன்றே!
கொற்கை நன்றே!

கடலில் மூச்சடக்கி
அவன் கையில்
முத்து.
வணிகன் கையில்
சொத்து.
வீட்டில்
அவள் செத்து.

கொற்கை எங்கே?
கொற்கை எங்கே?

கீழடிப் பானையில்
கிறுக்கிவைத்தது
"அவன்" பெயரா?

3

கி.பி 2019

நான் சிந்து.

இது என்
தொப்புள் கொடியின்
பெயர்.

என்
வேருக்கும்
விழுதுக்கும்
வேறு பெயர் இல்லை.

இன்னும்
தோண்டப்படாத
நாகரிகம் போன்று
எனக்குள் நான்
புதைந்திருக்கிறேன்.

நான்
உலகைக் கேட்கவில்லை.
உன்னைக் கேட்கிறேன்.
உனக்கு நான்
புலப்படுகிறேனா?

என் கண்களை
உன்னால்
வாசிக்க முடியாதென்றால்
என் கனவுகளை
எப்படி
வாசிக்க முடியும்?

உன்
அனுபவத் தராசில்
என்னை நீ
அளக்க முடியாது.

உன்
"கேள்வி ஞானத்தை"
கிழித்தெறி.

நீ
கண்டறிந்ததை எல்லாம்
கடலில் போடு.

உன்
வாடகைப் புலவர்களை
கழுவிலேற்று.
அவர்களை
வாசித்த வாய்கழுவு.

இன்னும்
கண்டுபிடிக்கப்படாத
கன்னித்தீவுகள்
எனக்குள் ஏராளம்.

நான் தான் சிந்து.

பஃறுளி மணல் எல்லாம்
என் பாதச் சுவடு..

நான் தான் குமரிக்கோடு.

முடிந்தால் கோடுபோடு.
இல்லையேல் கும்பிடு போடு.

நான்
வாசலில் நின்று
வழி அனுப்புவேன்
என்று
யோசனை இருந்தால்
ஒளித்து வை.

ஒழிந்து விடுவேன்
ஒழித்து விடுவேன்.

"பிரிந்தவர் கூடினால்
பேசவும் தோன்றுமோ"
என்று
கவிதை தோன்றினால்
அதன்
கழுத்தை நெரி.

பிரிந்தால் தானே..?

எனக்கென்று ஒரு
வரலாறு எழுதினால்
அதில்
"பிரிவதற்கு முன்
பிரிந்ததற்கு பின்"
என்ற
பிரிவினைக்கே
இடமில்லை.

நான்
பிரிக்க முடியாத
துகள்.
பிரிந்து பார்.
பிரித்துப் பார்.

நான்
விருப்பு வெறுப்பு
உள்ளவள்.
நெருப்பைக் கூட
விழுங்குவேன்
நீ சொன்னால்.

"பிரிவேன்"
என்று
பேச்செடுத்தாலே
நெருப்பாகி விழுங்குவேன்.
"என்னை" "நானே"!
ஆனால்
எனக்குள்
உன் நினைப்பை
இறுக்கி வைத்து..

4

பிரிந்து இருந்து
அலைந்து தொலைந்து
அரிந்து எறிந்து
பறந்து போக
நான்
கண்ணகி அல்ல.

நான்
பிறந்த ஊர்
"காரைக்காலும்"அல்ல.

நல்லவனே.
"நாகரிகமாக"
நடந்து கொள்.
என்னைச்
"சிதையாமல்"
பார்த்துக் கொள்.

நான்
சிந்து.

ஆர். பாலகிருஷ்ணன்

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றி
பின்இருந்து வாழ்வார் பலர்.

குறள் 1160