facebook-round

img

எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம்?

(டிசம்பர் 26 அன்று சென்னையில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் இசை, முழக்கப் போலீசாரின் கெடுபிடிகளுக்கிடையே கூட்டத்தை அவசரமாக முடிக்க வேண்டியிருந்ததால் மிகவும் சுருக்கமாகப் பேசினேன். போராட்டத்தில் நான் பேசியதன் விரிவான வடிவம் இங்கே.)

மழை வரும் என்ற நம்பிக்கையில்தான் நாம் வெயிலைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். இன்று காலை கிரகணம் விலகி விட்டது. நாட்டைப் பிடித்த கிரகணம் விலகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவருக்கும் இந்தியா தந்தை நாடாக இருந்த போதிலும் அதனை புண்ணிய பூமியாக அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்று சாவர்க்கர் குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மையில்லை. அப்படியே இருந்தாலும் இந்துக்களுக்கு மட்டும் இது புண்ணிய பூமியாக இருக்கிறதா?
கடந்த 20 வருடங்களில் நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக் கணக்கானோர் வேலையிழந்திருக்கின்றனர். பாலியல் குற்றங்களுக்கு உள்ளான நூற்றுக் கணக்கான பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். தலித்துகள் அடிப்படை மனித உரிமைகளை இழந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தானே? அப்படியென்றால் இது அவர்களுக்குப் புண்ணிய பூமியா? பாவ பூமியா?
நாம் இஸ்லாமியர் உரிமைக்காக மட்டும் இன்று போராட வில்லை. இந்தியாவைக் காப்பாற்றப் போராடுகிறோம். அது யார் கனவு கண்ட இந்தியா?
கோல்வால்கரின் இந்தியா:
“அன்னிய சக்திகளுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன: அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது தேசிய இனம் அனுமதிக்கும் வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும் போது வெளியேற வேண்டும். சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த சாரமான பார்வை இது மட்டுமே. இது மட்டுமே தர்க்கரீதியான, சரியான தீர்வு. அது மட்டுமே தேசிய வாழ்வு ஆரோக்கியமானதாகவும் குலைக்கப்படாமலும் இருக்கச் செய்யும். அது மட்டுமே அரசியல் அமைப்பில் ஒரு தேசத்திற்குள் மற்றொரு தேசத்தை உருவாக்கும் புற்றுநோயிலிருந்து நாட்டைக் காக்கும்.
அபுல் கலாம் ஆசாதின் இந்தியா:
மார்ச் 1940இல் இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து இரண்டு முஸ்லிம் தலைவர்கள் பேசினர். அதில் ஒருவர் முகமது அலி ஜின்னா. முஸ்லிம் லீக் மார்ச் 23, 1940 அன்று நிறைவேற்றிய பாகிஸ்தான் தீர்மானம் குறித்து அவர் பேசினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ராம்கரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அபுல் கலாம் ஆசாத் தலைமை உரையாற்றினார்.
அவர் பேசியது இதுதான்:
“நான் ஒரு முஸல்மான்; அந்த உண்மையைக் குறித்து எனக்குப் பெருமைதான். இஸ்லாமிய மதத்தின் அற்புதமான 1300 வருட பாரம்பரியத்தை நான் வரித்துக் கொண்டுள்ளேன். அந்தப் பாரம்பரியத்தின் மிகச் சிறிய துண்டைக் கூட நான் இழக்க மறுக்கிறேன். இஸ்லாமின் வரலாறு, போதனைகள், கலைகள், இலக்கியங்கள், நாகரீகங்கள் என் சொத்து. என் அதிர்ஷ்டம். அவற்றைப் பாதுகாப்பது என் கடமை.
ஒரு முஸல்மானாக எனக்கு இஸ்லாமிய மதத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் விசேஷமான ஆர்வம் இருக்கிறது. அவற்றில் நடக்கும் எந்தத் தலையீட்டையும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் இந்த உணர்வுகளைத் தவிர, என் வாழ்க்கையும், சூழலும் என் மீது திணித்திருக்கும் பிற உணர்வுகளும் எனக்கு இருக்கின்றன. இஸ்லாமியத்தின் தன்மை இந்த உணர்வுகளுக்குக் குறுக்கே வருவதில்லை; அது நான் முன்னே செல்ல எனக்கு உதவுகிறது. ஒரு இந்தியனாக இருப்பதில் எனக்குப் பெருமை இருக்கிறது. இந்திய தேசியம் என்கிற பிரிக்க முடியாத ஒற்றுமையின் அங்கம் நான். இந்த உன்னதக் கட்டுமானத்தினால் தவிர்க்க முடியாதவன் நான். நான் இல்லாமல் அந்த அற்புதக் கட்டுமானம் முழுமை பெறாது. இந்தியாவைக் கட்டுவதில் பயன்பட்ட அம்சங்களில் முக்கியமானவன் நான். இந்தப் பெருமையை நான் என்றும் விட்டுக் கொடுக்க முடியாது.
விருந்தோம்பலில் சிறந்த இந்திய மண்ணை வீடாகப் பாவித்து பல மனித இனங்களும், கலாச்சாரங்களும், மதங்களும் அதனை நோக்கிப் பாய்வதும், கூண்டு வண்டிகளில் (கேரவன்) வந்த பயணிகள் இங்கு ஓய்வெடுப்பதும் அதன் விதியாக இருந்தது. வரலாறு உதிப்பதற்கு முன்பே கூண்டு வண்டிகள் இந்தியாவிற்குள் வந்தன. அவற்றைத் தொடர்ந்து அலை அலையாக புதியவர்கள் வந்து சேர்ந்தனர். செழித்துப் பரந்திருந்த இந்த மண் அவர்களனைவரையும் தன் மார்போடு அணைத்து வரவேற்றது. அவர்களின் அடியொற்றி கடைசியாக வந்த மூன்று கூண்டு வண்டிகளில் இருந்த பயணிகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விட்டனர். இதனால் இரு வேறு கலாச்சார நீரோட்டங்கள் கலந்தன. முதலில் கங்கை, யமுனை போல வேறு பாதைகளில் ஓடினாலும், இயற்கையின் மாறாத விதி அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்து சங்கமிக்கச் செய்தன.
இந்த சங்கமம் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வானது. அன்று முதல் பழைய இந்தியா இருந்த இடத்தில் ஒரு புதிய இந்தியாவை விதி தனக்கே உரித்தான ரகசிய வழியில் உருவாக்கியது. நாங்கள் எங்களுடைய செல்வங்களைக் கொண்டு வந்தோம்; இந்தியாவும் அதன் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் செல்வக் குவியல்களைக் கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் செல்வங்களை அவளுக்குக் கொடுத்தோம். அவளும் செல்வங்கள் குவிந்து கிடந்த அறையின் கதவுகளை எங்களுக்காகத் திறந்து வைத்தாள். நாங்கள் அவளுக்கு அதிகம் தேவைப் பட்டதோ அவற்றையெல்லாம் கொடுத்தோம் - இஸ்லாமின் கருவூலத்திலிருந்த விலைமதிப்பற்ற பரிசுகளையும், ஜனநாயகம், மனித உரிமைகள் எனும் செய்திகளையும் கொடுத்தோம்….
அதற்குள் 11 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இந்திய மண்ணின் மீது இந்து மதத்திற்கு இருந்த அளவு உரிமை இஸ்லாமிற்கும் வந்து விட்டது. இந்து மதம் இங்கிருந்த மக்களின் மதமாக பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இருந்ததென்றால், இஸ்லாமும் அவர்களின் மதமாக ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. தான் இந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று ஒரு இந்து பெருமையுடன் கூறுவது போல, நாங்களும் இஸ்லாமைப் பின்பற்றும் இந்தியர்கள் என்று அதே பெருமையுடன் கூற முடியும். இந்த வட்டத்தை இன்னும் விரிவாக்கி ஒன்று சொல்வேன். இந்தியாவில் வாழும் ஒருகிறிஸ்துவர் கூட தான் ஒரு இந்தியன் என்றும், தான் தன் மதமாகிய கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதே பெருமையுடன் கூற உரிமை உள்ளது.
பதினோரு ஆண்டுகளின் பொது வரலாற்றின் பொது சாதனைகள் இந்தியாவை செழுமையாக்கியுள்ளன. நமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கியங்கள், நமது கலாச்சாரம், நமது கலை, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், நம் வாழ்க்கையின் கணக்கிலா நடப்புகள் _ இவை அனைத்தும் நம் பொது விழைவின் முத்திரையைத் தாங்கி நிற்கின்றன. நம் வாழ்க்கையின் எந்த அம்சமும் இந்த முத்திரையிலிருந்து தப்பிக்க வில்லையென்றே கூறலாம். நமது மொழிகள் வேறாயிருந்தாலும் நாம் பொது மொழி ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டோம்; நமது பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை; ஆனால் அவை ஒன்றன் மீது ஒன்று வினை புரிந்து ஒரு புதுச் சேர்க்கையையை உருவாக்கின. நம்முடைய புராதன உடைகளை பழைய படங்களில் மட்டுமே காணமுடியும்; அவற்றை யாரும் இப்போது உடுத்துவதில்லை. இந்தப் பொதுச் செல்வம் நம்முடைய பொது தேசியத்தின் பாரம்பரியம்; அதை விட்டு விட்டு, கூட்டு வாழ்க்கை தொடங்குவதற்கு முன் இருந்த காலத்திற்கு நாங்கள் செல்ல விரும்ப வில்லை.”
நாம் ஆசாதின் இந்தியாவிற்காகத்தான் போராடுகிறோம்
பிரதமர் மோடி மனதின் குரல் (மன் கீ பாத்) என்று அடிக்கடி மக்களிடையே உரையாடுகிறார். ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் ஒரு நாடே பதட்டமடைகிறது என்றால் எவ்வளவு மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்று புரியும். கேள்வி கேட்க எதிரே யாரும் இல்லாத ஊடகங்கள் மூலமாகத்தான் அவர் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
மோடிக்கு ஒரு வேண்டுகோள். இன்று இந்திய நாட்டின் மக்கள், குறிப்பாக மாணவர்கள், உங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதுதான் மதசார்பற்ற இந்தியாவுடைய மன் கீ பாத். இதை நீங்கள் கேட்க வில்லையென்றால் உங்களுக்கு விமோசனமே கிடையாது.

-Vijayasankar Ramachandran

;