facebook-round

img

விண்ணில் பறந்த பீசோஸ்... மண்ணில் பிறந்த சங்கம்... -சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து

அமெரிக்காவில் சங்கமாதல் விகிதம் சரிந்துள்ள வேளையில் பன்னாட்டு நிறுவனமான அமேசான் கோட்டைக்குள் தொழிற்சங்கம் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்க வெற்றி . இதை சாத்தியமாக்கிய கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் தலைமையிலான அமேசான் தொழிலாளர் சங்கத்திற்கு வாழ்த்துகள் என்று சு.வெங்கடேசம் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

அமேசான் நியூயார்க் கிட்டங்கியில் "முதல் சங்கம்"

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேரிடர் காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை தீர்க்க கோரி போராடி வேலைநீக்கம் ஆன கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் முயற்சி வெற்றி.

27 ஆண்டு கால அமேசான் வரலாற்றில் ஏப்ரல் 1, 2022 திருப்பு முனை. தொழிலாளர்கள் வாக்கெடுப்பில் தேவையான வாக்குகளை கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் தலைமையிலான அமேசான் தொழிலாளர் சங்கம் பெற்றுள்ளது. ஆகவே சங்கம் அங்கே அமைகிறது.

உலகம் முழுக்க 16 லட்சம் தொழிலாளிகளை கொண்ட அமேசான் நிறுவனம் சங்கம் அமைவதை தடுக்க வேண்டுமென என்னன்னவோ செய்து பார்த்தது. தொழிலாளர்கள் குழுக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், குறும் செய்திகள் என இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடியை அமேசான் வாரி இறைத்துள்ளது. 119 லட்சம் கோடி வணிகத்தை உலகம் முழுவதும் கடை விரித்து செய்கிற, இப்போது அடுத்த கட்டமாக விண்வெளி சுற்றுலா என லாப சிறகுகளை வானம் நோக்கி விரித்துள்ள அமேசான் அதிபர் ஜெஃப் பீசோஸ் வசம் பணத்திற்கு என்ன பஞ்சம்!

இருந்தாலும் கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் குழுவினர் தொழிலாளர்களிடம் தொடர்ந்து பன்முக உரையாடல்களை நடத்தினர். நிறுவனத்தின் உச்சாணிக் கொப்பில் உள்ளவர்களின் வருமான அளவுகளோடு தொழிலாளர்களுக்கு தரப்படும் சம்பளத்தை ஒப்பிட்டு காண்பித்தனர். வீழ்ந்து வரும் பணித் தரம் பற்றி தொழிலாளர் மத்தியில் அவர்கள் பேசினார்கள். டிசம்பர் 2021 இல் எட்வர்ட்ஸ் விலே யில் சூறாவளி தாக்கிய போது 6 அமேசான் தொழிலாளர்கள் நிறுவனத்தின் அணுகுமுறையால் மரணம் அடைந்தனர். இது குறித்து அமெரிக்க செனட்டின் "மேற்பார்வை மற்றும் சீர் திருத்த குழு" விசாரித்து வருகிறது. இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது தொழிலாளர்களை பாதுகாப்பின்றி நடத்தும் அமேசானின் செயல்பாடுகள் குமுறல்களை உருவாக்கி இருந்தன. எல்லாம் ஸ்மால்ஸ் குழுவினரின் பிரச்சாரத்தில் கொண்டு செல்லப்பட்டன. சமூக வலைத் தளம் மிக நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டது. கிட்டங்கிக்குள்ளும் தொழிலாளர்களிடம் செய்திகள் பரிமாறப்பட்டன.

அமெரிக்காவில் சங்கமாதல் விகிதம் சரிந்து வந்துள்ள வேளையில் அமேசான் சங்கம் பிறந்துள்ளது. அமெரிக்காவில் 10.8 சதவீதம் தொழிலாளர் களே 2020 இல் சங்கமாகி இருந்தனர். அது 10.3 சதவீதமாக 2021 இல் சரிந்துள்ளது. இந்த சூழலில், பன்னாட்டு வணிக நிறுவனமான அமேசான் கோட்டைக்குள் தொழிற்சங்கம் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்க வெற்றி. அமேசானின் இதர தளங்களிலும் இது அதிர்வலைகளை உருவாக்கும்.

"அமேசான் அதிபர் ஜெஃப் பீசோஸ் விண்வெளி சுற்றுலா சென்ற போது, நாங்கள் தொழிலாளர் கரங்களை விண் உயரச் செய்தோம்"
- கிறிஸ்டியன் ஸ்மால்

கோலியாத்தை விழ்த்தியுள்ள தாவீது ஆக...

வாழ்த்துக்கள் ஸ்மால்ஸ். என்று தெரிவித்துள்ளார்.