election2021

img

வங்கத்தைப் பாதுகாக்க ஒரே வழி மம்தாவையும்-பாஜகவையும் வீழ்த்துவதே.... பிரச்சாரக் கூட்டங்களில் பிருந்தா காரத் பேச்சு....

கொல்கத்தா:
கொரோனா வைரசைவிட மிக மிகக்கொடியது பாஜக - ஆர்எஸ்எஸ் என்றும், அந்தக் கொடிய வைரசை வங்கத்திற்கு கொண்டு வந்து மக்களைத் தொற்றச் செய்தவர் மம்தா பானர்ஜி என்றும் இந்த இரண்டு கொடியவர்களையும் இத்தேர்தலில் வீழ்த்துவதே வங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்றும் பிருந்தா காரத் கூறினார். 

இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் மூன்று கட்டங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 (இன்று) நடைபெறுகிறது. 44 தொகுதிகளில் நடைபெற உள்ள இந்த வாக்குப்பதிவில், மொத்தம் 1,15,81,022 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதிபெற்றவர்கள். இந்தத் தொகுதிகள் ஹவுரா, தெற்கு 24 பர்கானா, ஹூக்ளி ஆகிய தெற்கு வங்க மாவட்டங்களிலும், அலிப்பூர் துவார், கூச்பிகார் ஆகிய வடக்கு வங்க மாவட்டங்களிலும் உள்ளன. ஹவுராவில் இரண்டாம் கட்டமாகவும், தெற்கு 24 பர்கானாவில் மூன்றாம் கட்டமாகவும், ஹூக்ளியில் இரண்டாம் கட்டமாகவும் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதிகளுக்கான பிரச்சாரம் வியாழனன்று நிறைவுபெற்றது. இத்தொகுதிகளுக்கான நிறைவுப் பிரச்சாரத்திலும், அடுத்த கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளிலும் இடதுமுன்னணி தலைமையிலான ஐக்கிய முன்னணி தலைவர்கள் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டனர். 

பிருந்தா காரத்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கடந்த இரண்டு நாட்களாக வங்கத்தின் பல்வேறு தொகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள பால்லி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தீப்சிதா தர்ரை ஆதரித்து, பால்லி நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு நிறைவுப் பிரச்சாரத்தில் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாடு முழுவதும் மதவெறி வைரசை பரப்பிக் கொண்டிருக்கிற பாஜக - ஆர்எஸ்எஸ்  மற்றும் பத்தாண்டு காலமாக வங்க மக்களை சூறையாடிய திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றை வீழ்த்தக்கூடிய சானிட்டைசராக வங்க மக்களின் ஒற்றுமையும் போராட்டமும் திகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். மேலும், வங்கத்தில் மம்தா ஆட்சிக்கு வந்த பிறகு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது பெண்கள்தான் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த சில ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் வன்குற்றங்களும் பெருகி உள்ளன; இது மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். வங்கத்தை பாதுகாக்க திரிணாமுல் ஆட்சியை வீழ்த்துவது அவசியம்; அதேவேளை பாஜகவை நுழையவிடாமல் செய்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் பிருந்தா காரத்துடன், நந்திகிராம் தொகுதி சிபிஎம் வேட்பாளரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான மீனாட்சி முகர்ஜியும் பங்கேற்று உரையாற்றினார்.

மாணிக் சர்க்கார்
முன்னதாக, தீப்சிதா தர் போட்டியிடும் பார்லி தொகுதி உட்பட ஹவுரா மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து திரிபுரா முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தீவிரப் பிரச்சாரம்
ஐக்கிய முன்னணி சார்பில் இடதுமுன்னணியின் வேட்பாளர்களாகப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் இடதுமுன்னணி தலைவருமான பிமன்பாசு, மாநில செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா, மத்திய குழு உறுப்பினர் ராபின்தேவ் உள்ளிட்டோர் மட்டுமின்றி, வங்கத்தின் பிரபல நட்சத்திரங்களும், பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.சிங்கூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஸ்ரீஜன் பட்டாச்சார்யாவை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் வங்க திரைப்படக் கலைஞர்கள் உஷாஷி சக்கரவர்த்தி, பாட்ஷா மைத்ரா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

எதிர்முகாமில் ஏராளமான குற்றவாளிகள்
நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் திரிணாமுல் மற்றும் பாஜக வேட்பாளர்களில் ஏராளமானோர் கிரிமினல் குற்றவாளிகள் என்பது கவனிக்கத்தக்கது. 65 வேட்பாளர்கள் மீது மிகக் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவர்கள் வாக்கு கேட்டு சென்ற போது எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திரிணாமுல் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஏற்கெனவே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முன்னதாக நந்திகிராமிற்குச் சென்ற போது தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி தொடர்ந்து சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறே, காலில் பெரிய கட்டு போட்டுக் கொண்டு பிரச்சாரத்திற்கு சென்று வருகிறார். நந்திகிராமத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவரது மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.இந்நிலையில் அவர் தனது பிரச்சாரத்தின்போது மத்திய பாதுகாப்புப் படையினர் மேற்குவங்கத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதிசெய்யவில்லை என்று கூறி, அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே பாஜக தரப்பிலும் மிக மோசமான முறையில் மதவெறி பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளன. குறிப்பாக திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறி இப்போது நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக வேட்பாளராக போட்டியிடும் சுவேந்து அதிகாரி, அத்தொகுதியில் தேர்தல் முடிந்த நிலையில் பிற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பிரச்சாரத்தின்போது, “இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகவோ, திரிணாமுல் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ வாக்காளர்கள் வாக்களித்தால், மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தையே ஒரு ‘மினி பாகிஸ்தானாக’ மாற்றிவிடுவார்” என்று சுவேந்து அதிகாரி கூறியிருந்தார். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ (எம்எல்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறியுள்ளது.

பிரச்சாரக் களத்தில் திரிணாமுல் கட்சியும், பாஜகவும் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டும், லாவணிக் கச்சேரி நடத்திக் கொண்டும் இருக்கும் நிலையில் ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன் நிறுத்தி தங்களது பிரச்சாரத்தையும், வாக்கு சேகரிக்கும் பயணங்களையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

படக்குறிப்புகள் 

பால்லி நகரில் நடைபெற்ற பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் சிபிஎம் வேட்பாளர் தீப்சிதா தர் மற்றும் நந்திகிராம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் மீனாட்சி முகர்ஜி ஆகியோரின் கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த பிருந்தா காரத்.

1. பர்துவான் தெற்கு தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ப்ரீத்தாவுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் மீனாட்சி முகர்ஜி உரையாற்றினார்.

2.ஜாதவ்பூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் டாக்டர் சுஜன் சக்கரவர்த்தியை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பேரணியில் இடதுமுன்னணி தலைவர் பிமன்பாசு பங்கேற்ற காட்சி.

3.மால்டா மாவட்டத்தில் ஐக்கிய முன்னணி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் ஊர்வலக் காட்சி.

4.சிங்கூர் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யாவை ஆதரித்து திரைக்கலைஞர்கள் உஷாஷி சக்கரவர்த்தி, பாட்ஷா மைத்ரா ஆகியோர் பிரச்சாரம் 

5.அசன்சால் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளரும் இந்திய மாணவர் சங்க தலைவருமான அய்ஷிகோஷ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
 

;