election2021

img

வெல்லமண்டியில் கமிஷன் அடித்துக் கொண்டிருந்த பழனிசாமி விவசாயிகளை தரகர் என்பதா?

50 ஆண்டு காலமாக மக்கள் பணியாற்றி முதலமைச்சர் வேட்பாளராக வந்துள்ளேன். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி, படிப்படியாக வளர்ந்து வந்தாரா? ஊர்ந்து வந்தாரா? என்பது சமூக வலைதளங்களில் சந்தி சிரிக்கிறது. எடப்பாடி விவசாயி என்பது உண்மையாக இருந்ததால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பீர்களா? 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்தவர்கள் அதிமுகவினர். 100 நாட்களை தாண்டி தில்லியில் விவசாயப் பெருங்குடிகள் லட்சக்கணக்கானோர் குடும்பத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்த விவசாயிகளை புரோக்கர் என்றே கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். வெல்ல மண்டியில் கமிசன் அடித்துக் கொண்டிருந்த பழனிசாமி, போராடும் விவசாயிகளை தரகர் என்கிறார். குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளை அடித்து, ஊழல் செய்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி ஏப்ரல் 6ந் தேதி கலையப்போகிறது.

கிரிமினல் கேபினட்
தமிழ்நாட்டின் கடன் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய். 2011ல் திமுக ஆட்சியை விட்டு இறங்கிய போது 1 லட்சம் கோடி ரூபாய் கடன். இந்த 10 வருடங்களில் 5 லட்சம் கோடி ஆகி இருக்கிறது. எடப்பாடிக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெரியவில்லை. பொல்லாத ஆட்சி என்பதற்கு அடையாளமே பொள்ளாச்சிதான். 200க்கும் மேற்பட்ட பெண்களை, கடத்தி, பலாத்காரம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து, பணம் பறித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறது. குட்கா விநியோகம் செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு அதில் கமிஷன் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்திருக்கிறார், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர். எனவே, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு வந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும், கிரிமினல் கேபினட்டில் உள்ள பலர் சிறைக்குப் போவார்கள்.

குறிப்பாக, முதலமைச்சர் பழனிசாமி மீது சம்பந்திக்கு டெண்டர் விட்டதில் ஊழல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் என அத்தனை அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். எனவே, திமுக தலைமையில் ஆட்சி அமைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள். 

தாம்பரம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து...

படக்குறிப்பு :

1.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை. சந்திரசேகர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு வியாழனன்று காலை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

2.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர்கள் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், திருப்பெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வப்பெருந்தகை, திருப்போரூர் தொகுதி விடுதலைசிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோருக்கு வாக்கு கேட்டு தாம்பரத்தில், புதனன்று இரவு நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

;