திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக ஆதித்தமிழர் பேரவைநிறுவனத் தலைவர் இரா.அதியமான் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தமிழகசட்டமன்றத் தேர்தலின் முக்கியத்துவம், அவிநாசி தொகுதியின் நிலைமை, கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணி, வெற்றி வாய்ப்பு குறித்துதிங்களன்று அவிநாசியில் இரா. அதியமான் தீக்கதிர் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டமன்றத் தேர்தலின் முக்கியத்துவம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேர்தல் என்பது பாசிசத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையில் நடக்கும் போர்! மத்தியில் ஆளும் மோடி அரசு திணிக்கும் அனைத்து விசயங்களையும் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு ஆதரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம். மாநில உரிமை பறிக்கப்படுகிறது. நீட் தேர்வு வேண்டாம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நீட் தேர்வைத் திணித்தார்கள். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரால் பழைய குலக்கல்விகொள்கையைத் திணிக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தில்லியில் 120 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 200 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். எனினும் வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. இந்தச் சூழலில் பாசிசத்துக்கு எதிராக போராடும் தமிழகத்தின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அவிநாசி தொகுதியில் போட்டியிட திமுக இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
காய்கறி குளிர்சாதன கிடங்கு
அவிநாசி தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. வேளாண்மை, நெசவு மற்றும் பருத்தி விளைச்சல் உள்ளது. இதுவரை, கடந்த 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. இங்கு காய்கறிஉற்பத்தி நிறைய இருக்கிறது. காய்கறிகளைப்பாதுகாத்து வைப்பதற்கு குளிர்சாதனக் கிடங்குதேவைப்படுகிறது, ஆனால் இங்கு இல்லை. அதேபோல் திருப்பூர், அவிநாசியை உள்ளடக்கி சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக உள்ளது. இந்த விசயத்தில் கவனம் செலுத்துவேன்.
அவிநாசி மருத்துவமனை தரம் உயர்த்துதல்
தற்போது அவிநாசியில் இருக்கும் அரசுமருத்துவமனையை மேம்படுத்த வேண்டியுள்ளது. உடல்களைப் பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டு வசதி, அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு,முழு வசதி பெற்ற துறையாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.
சேவூர் தனி தாலுகாஅதேபோல் சேவூரை தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகா அமைக்க வேண்டும்என்ற கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பேன்.
அருந்ததியர் வீட்டுமனை
இந்த தொகுதியில் 40 சதவிகிதம் அருந்ததியர் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு போதுமான வீட்டு வசதி இல்லை. ஒரே வீட்டில்பல பேர் வசிக்கும் நிலை உள்ளது. வீட்டுமனைப்பட்டா கோரியும் பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை. சிலருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவுக்கும் இடம் எங்கிருக்கிறது என்று தெரியாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
தண்ணீர் வசதி, சுடுகாடு, சாலை வசதி பெருமளவு இல்லாத நிலை உள்ளது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே முடிவு உள்ளது. அதுகூட இப்பகுதிகளில் செய்யப்படாமல் உள்ளது.
வேலைவாய்ப்பு
இங்கிருக்கும் மக்கள் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அத்துடன் நிலம் சார்ந்த முதலாளிகளை சார்ந்திருக்கும் சூழல் உள்ளது. நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் யாருக்கும் கிடைக்கவில்லை. கல்வி விழிப்புணர்வு பெரிய அளவு வரவில்லை. பள்ளி இடைநிற்றல் அதிக அளவுஇருக்கிறது. இதைச் சரி செய்ய அரசு நிர்வாகத்திடம் உரிய கட்டமைப்பு இல்லை. சட்டமன்றஉறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தால் இப்பணிகளை உரிமையுடன் செய்து கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.
அத்திக்கடவு திட்டம்
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு பணம் ஒதுக்கி கருவிகள் சாலையோரம் போட்டுவைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஊழல் மலிந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டத்தை ஆராய்ந்து முறையாக, நிச்சயம் இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும்.மக்கள் தங்கள் குறைகளை செல்போன்வாயிலாகத் தெரிவிப்பதற்கு ஆன்ட்ராய்ட் செயலி ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அந்த செயலி மூலம் மக்கள் தங்கள் பிரச்சனைகள், குறைகளைத் தெரிவித்து தீர்வு காண முடியும்.
உறுதியான வெற்றி வாய்ப்பு
திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் எனக்கு உற்சாகமாக ஆதரவளித்து தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். எனவே வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. இப்போது வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராகதமிழக சட்டமன்ற சபாநாயகர் பணபலத்துடன் போட்டியிடுகிறார். ஆனால் 25 ஆண்டுகளாக ஆதித்தமிழர் பேரவையை நடத்தி வருவதால், இப்போது அந்த உழைப்பின் விளைவைப் பார்க்க முடிகிறது. பேரவைத் தோழர்கள் எல்லா பகுதிகளிலும் திண்ணைப் பிரச்சாரமாக நடத்துகின்றனர். தோழமை கட்சியினர், பல்வேறு அமைப்பினர், முற்போக்கு சிந்தனை கொண்ட பலர் ஆதரவாக தேர்தல் களத்தில் எனக்காக வேலை செய்து வருகின்றனர். பணத்தால் ஓட்டு வாங்கி விட முடியும்என அவர்கள் நினைத்தால் அது நடக்காது.
திசை திருப்பி சீர்குலைக்கும் முயற்சி
சமூக ஊடகத்தில் எனக்கு எதிராக, எனதுகுரலை அப்படியே மார்ப்பிங் செய்து பயன்படுத்துவது எனக்கே அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் எங்கோ நான் பேசிய வீடியோவை இப்போது எடுத்துபயன்படுத்த வேண்டிய தேவை என்ன? ஆனால்இதைச் செய்ததன் மூலம் எதிர்க்கட்சியினர் தொகுதி முழுவதும் என்னை அறிமுகப்படுத்திவிட்டனர்.இந்த தேர்தல் தனிநபர்களுக்கான தேர்தல்அல்ல. ஒட்டுமொத்த பிற்போக்கு சக்திகளுக்குஎதிராக, மத்தியில் இருக்கும் பாசிச சக்திகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படும் மாநில அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இந்த தேர்தலில் மாபெரும் செய்தியாகும். இதை திசை திருப்பும் முயற்சியாகவே, சமூக ஊடகத்தில் எனக்கு எதிரான பிரச்சாரத்தைக் கருதுகிறேன்.அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக இருக்கும் சமுதாயத்தின் பிரதிநிதியாக நான் செயல்படும் அதே சமயம் பொதுவான அத்தனை பிரச்சனைகளிலும் நாங்கள் மற்றவர்களுடன் இணைந்து சமமாக பயணித்துள்ளோம். எங்கள் அமைப்பு காவிரி பிரச்சனை, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, வேளாண் சட்டங்களை எதிர்ப்பு என தொடர்ந்து இயங்கி இருக்கிறது. எனவே இதில் எந்த சமுதாய சிக்கலும் வர வாய்ப்பு இல்லை.
கூட்டணி கட்சிகள் முழு ஒத்துழைப்பு
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. வேட்பாளர் அறிமுகம், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின்அவர்கள் பிரச்சாரம் நடத்தி முடித்திருக்கிறோம். அனைத்து கூட்டணி கட்சிகளும், குழுக்களும் முழு வெற்றி பெற ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நிறைய அமைப்புகள் எங்கள் வெற்றிக்கு ஏராளமாக ஆலோசனை தந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறோம். எனவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிக அருமையாக உள்ளது.
சந்திப்பு: வே.தூயவன்,எம்.அருண், மனோஜ்