கோவில்பட்டி;
கோவில்பட்டியில் வியாழனன்று நடந்த தேர்தல் பரப்புரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., பேசியதாவது:
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் ஒரு சாதாரண விவசாயி. 40 ஆண்டுகளாக ஒரு கட்சியில் இருப்பதும், அதில் 22 ஆண்டுகள் முழுநேர ஊழியராக பணியாற்றுவதும் சாதாரண காரியமல்ல. அப்படிப்பட்ட ஒரு தொண்டர் நமதுதொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கூறியதுபோல சாலை வசதிகள் மேம்பாடு அடையும். அடிப்படை வசதிகள் சரி செய்யப்படும். தீப்பெட்டிதொழில் பிரச்சனையில் தொழிலாளர் களுடன் நின்று அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
முன்னாள் அமைச்சரும் திமுக தலைமைக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு வீட்டில், அவருடைய கல்வி நிலையங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கொண்டு சோதனையிட வைத்துள்ளார்கள். இது மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்கிற சதித்திட்டம். இதைத்தான் வடகிழக்கு மாநிலங்களில் செய்தார்கள். அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம்மாநிலங்களில் ஒரு வார்டில்கூட பாஜக வெற்றிபெற முடியாது. ஆனால் அந்த இடங்களில் எல்லாம் இதுபோன்ற சோதனைகள் செய்து அவர்களை மிரட்டி தங்களது கட்சியில் சேர்த்து தங்களது ஆட்சியை அமைத்தார்கள். அந்த நோக்கத்துடன்தான் வேலுவின் கல்வி நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு எனது பலத்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாதியற்றவர்களா? நீதி எங்கே?
தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அந்த கொடூரம் நடந்தது. பெண்கள், ஆண்கள், மாணவர்கள், வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கச் சென்றார்கள். ஆட்சியர் தூத்துக்குடியை விட்டுவிட்டு கோவில்பட்டிக்கு வந்துவிட்டார். வேன்களில் ஏறி நின்றுகொண்டு காவல்துறையினர், ஊர்வலமாக வந்தவர்களை குறிவைத்து சுட்டார்கள். ஜாலியன்வாலாபாக் துப்பாக்கிச் சூடுபோல இருந்தது. 13 பேர் சுடுபட்டு அந்த இடத்திலேயே மாண்டார்கள். அதில் ஸ்னோலின் என்கிற பெண் பேசிக்கொண்டே வந்தபோது துப்பாக்கிகுண்டு வாயில் நுழைந்து தொண்டைக் குழியை கிழித்துக் கொண்டு சென்றது. சுருண்டு விழுந்து இறந்து போனாள். அன்று மாலை திரேஸ்புரம் என்கிற மீனவர் பகுதிக்குகாவல்துறையினர் சென்றார்கள். ஜான்சி என்கிற பெண் தூக்குவாளியில் பிள்ளைகளுக்கு சோறுடன் சென்று கொண்டிருந்தார். அவரது பக்கத்தில் சென்று சுட்டார்கள். தலை வெடித்து மூளை மண்ணில் விழுந்து சிதறிய காட்சியை கண்டவர்கள் கதறினார்கள். அன்று இரவே அவர்களது வீடுகளுக்குச் சென்றேன்.அவர்கள் கதறினார்கள். நாங்கள் நாதியற்றவர்களா? எங்களுக்கு நீதி கிடையாதா? என்று கேட்டார்கள். மூன்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூன்று முன்னாள் உயர்காவல் அதிகாரிகளையும் கொண்டு தயாரித்து கொடுக்கப்பட்ட 2400 பக்க அறிக்கை அப்படியே இருக்கிறது.
இதே மாவட்டத்தில்தான் மற்றொரு கொடுமை சாத்தான்குளத்தில் நடந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் என்கிற தந்தையும் மகனும் கடையில் இருந்தார்கள். காவல்துறையினர் வந்து அவர்களை இழுத்துக் கொண்டு சென்றார்கள். காவல்நிலையத்தில் வைத்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பெண்கள் இருப்பதால் வெளிப்படையாக கூறமுடியாது. அந்த கொடுமை களின் விளைவாக உடம்பெல்லாம் ரத்தம்,ஆசனவாயிலிலிருந்த ரத்தம் வடிந்து செத்துவிடுவார்கள் என்கிற நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கொண்டுவந்து அடைத்தார்கள். அங்கு இறந்து போனார்கள். இது நாடா? அல்லது காடா?கொடிய விலங்குகள் உலவும் பகுதியா? இதற்கெல்லாம் யார் தீர்ப்பு தருவது? நீதிமன்றம் தீர்ப்பு தரும் என்ற நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள்தான் நீதிபதிகளாக தீர்ப்பு தரவேண்டும்.
நம்பிக்கை மோசடி செய்த அரசு
தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால்வேலை வாய்ப்பு குறித்து ஒரு திட்டத்தை அமித்ஷா அறிவிக்கிறார். அவர்கள் ஒரு ஆணையத்தை அமைத்து வேலைக்கு ஆள் எடுப்பார்களாம். அதன்படி வெளிமாநிலத் தவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புவார்க ளாம். மும்மொழி திட்டத்தைக் கொண்டுவந்து புதிய கல்வித்திட்டம் என்று சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கொண்டுவந்து இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி,ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேசன் கார்டு என்று கூறுகிறார்கள். இது இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும். இங்கே இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை சிதைத்து, அமைதியை சீர்குலைத்து எதிர்காலத்தில் நமது பிள்ளைகளின் வாழ்வை பாழ்படுத்த மத்திய அரசுக்கு எடுபிடியாக இந்த அரசு செயல்படுகிறது.
நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று இரண்டு முறை கூறினார்கள். அதை நம்பி பிள்ளைகள் படித்து தேர்வு எழுதினார்கள், தேர்வு முடிவு வந்தது. ஆனால் நீட் தேர்வு ரத்தாகவில்லை. அரியலூர் மாவட்டத்தில் அனிதா என்கிற பெண் 1175 மதிப்பெண் பெற்றும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. டாக்டராக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் கழுத்தில் கயிறை கட்டி தூக்கில் தொங்கி உயிரை விட்டார். இப்படி 13 பிள்ளைகள் நீட் தேர்வால் டாக்டராக முடியவில்லையே என்றுஇறந்துபோனார்கள். இதற்கு இந்த அரசுதான் காரணம். அரசின் நம்பிக்கை மோசடியே இதற்கு காரணம்.
கோவில்பட்டி தொகுதியில் மக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு ஊழியன் தேவை. சீனிவாசன் கட்சி வித்தியாசம், சாதி,மத வித்தியாசம் பார்க்காத ஒரு தொண்டன். அவரிடம் வசதி இல்லை. ஆனால் கொள்கை இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் இல்லை.ஆனால் லட்சியம் இருக்கிறது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. நமது தொகுதியின் எம்எல்ஏவாக வரவேண்டிய அத்தனை தகுதியும் சீனிவாசனுக்கு இருக்கிறது. அவரைத் தேர்ந்தெடுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.முன்னதாக ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பொதுமக்களிடம் வேட்பாளர் கே.சீனிவாசன் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.