election2021

img

தமிழகத் தேர்தல் பாஜகவுக்கு எதிரான யுத்தம்.... கபிஸ்தலம், கும்பகோணத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு...

தஞ்சாவூர்:
பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை கபிஸ்தலம் மற்றும் கும்பகோணத்தில் பேசியதாவது:

“இந்த தேர்தல் ஒரு வழக்கமான, சராசரியான தேர்தல் அல்ல. இது மிகவும் ஆபத்தான கொள்கைகளை கொண்ட மதவாதக் கட்சியும், சாதியவாத கட்சிகளும் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி செய்ய துடிக்கின்ற ஒரு தேர்தல். இந்த ஆபத்தை நாம் புரிந்து கொண்டு, வாக்களிக்க வேண்டும்.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதோ தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல. பேரம் பேசி, பேரம் படிந்ததில் உருவான கூட்டணி அல்ல, இந்த கூட்டணியை மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கி வழிநடத்தி வருகிறார். நீட் போராட்டத்தில் துவங்கி கடைசியாக வேளாண் சட்டங்களை எதிர்க்கும் வரை திமுக கூட்டணியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து 5 ஆண்டு காலம் போராட்ட களங்களில் கைகோர்த்து நிற்கிறோம்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெறுகிற தேர்தலுக்காக இந்த கூட்டணி அல்ல, பாஜகவை உள்ளே வர விடாமல் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். மற்ற கட்சிகளை போல பாஜகவும் ஒரு அரசியல் கட்சி தானே என கேள்வி எழலாம். பாஜக என்பதுஆபத்தான பயங்கரவாத கொள்கை களை கொண்டிருக்கிற ஆர்எஸ்எஸ் இயக்கம். மோடியை இயக்குவது பாஜக அல்ல, ஆர்எஸ்எஸ் இயக்கம்தான்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பதே காந்தியடிகளையே சுட்டுக் கொன்ற இயக்கம். பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்ற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கம் சர்தார் வல்லபாய் படேல் காலத்தில் தடை செய்யப்பட்டது. அவ்வளவு மோசமான, ஆபத்தான, பயங்கரவாத பின்னணியை கொண்ட இயக்கம்தான் அவை. அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவுதான் பாஜக.தமிழகத்தில் அடிப்படை பிரச்சனைகளை பற்றி பேசமாட்டார்கள். இங்குள்ள குடிநீர் பிரச்சனை, சுடுகாடுபாதை பிரச்சனை, விவசாயிகள் பிரச்ச னை, சமூக நீதி போன்றவைகளைப் பற்றி அவர்கள் பேசமாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என பிரித்து பேசி வருகின்றனர். இந்துக்கள் பட்டினிகிடந்தாலும், அடிப்படை உரிமையில்லாமல் இருந்தாலும் பேசமாட்டார்கள், ஆனால் திடீரென இந்து பாசம் மட்டும் பொங்கி வருகிறது. இதுதான் பாஜக. தமிழகத்திற்குள் பாஜக நுழைய முருகன் அரசியலை கையிலெடுத்துக் கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளை பற்றி பாஜக என்றைக்காவது பேசியதுண்டா, இது மிகவும் ஆபத்தானது. வடஇந்தியா முழுவதும் இப்படிதான் மதவெறியை பரப்பியுள்ளார்கள்.

பாஜகவுக்கு எதிரான யுத்தம்தான் இந்த தேர்தல் யுத்தம் என்பதை யாரும்மறந்துவிடாதீர்கள். எதிரணியில் போட்டியிடக் கூடிய 234 தொகுதிகளிலும் பாஜகதான் நிற்கிறது. கூட்டணி சின்னங்களான இரட்டை இலை, மாம்பழம் இருந்தாலும் கூட, அது உண்மையிலேயே பாஜகதான் என்பதை மறந்துவிடக் கூடாது.பெரியாரால் பக்குவப்படுத்தப் பட்ட, அண்ணாவால் செழுமைப் படுத்தப்பட்ட கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட இந்த தமிழர் பூமி, சாதி வெறியர்களிடம் சிக்கிவிடக்கூடாது. மதவெறியர்களின் இலக்குக்கு இரையாகிவிடக் கூடாது. அவை கட்டி காப்பாற்றப்பட வேண்டுமானால் திமுகவின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்”. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.