கோவில்பட்டி:
அருந்ததியர் இடஒதுக்கீடுபெறவும், ஒண்டி வீரனுக்கு மணிமண்டபம் அமைக்கவும், தூய்மைப் பணியாளர் நலவாரியம் அமைக்கவும் குரல் கொடுத்த கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என ஆதி தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் கூறினார்.
கோவில்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து புதனன்று பல்வேறுபகுதிகளில் கு.ஜக்கையன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒடுக்கப்பட்டோரில் அடிமூட்டையாக உள்ள அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடுவழங்க வேண்டும் என குரல் எழுப்பிய கட்சி சிபிஎம். அந்த கோரிக்கையை நிறைவேற்றியது திமுக தலைவர் கலைஞர்.
ஆங்கிலேயரை முதன்முறையாக தோற்கடித்து விரட்டியடித்த விடுதலைப்போராட்ட வீரன் ஒண்டி வீரனுக்கு மணிமண்டபத்தை அமைத்தது திமுக ஆட்சியில் கலைஞர் என்றாலும், இந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபாலபாரதி ஆவார். அதுபோல் தூய்மைப்பணியாளர் நலவாரியம் அமைக்க கோரிக்கை வைத்த ஒரே வாரத்தில் நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர். அந்த நலவாரியத்தை செயல்படுத்தாமல் கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசு முடக்கி வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.