கொளத்தூர், எடப்பாடி, கோவில்பட்டி, கோவை தெற்கு, திருவெற்றியூர் ஆகிய தொகுதிகள் ‘முதல்வர்’ வேட்பாளர்கள் போட்டியிடுவதால் “ஸ்டார் அந்தஸ்து” பெற்றுள்ளன. அவற்றுள் கோவில்பட்டி தொகுதி, முற்றிலும் வித்தியாசமான போட்டியை சந்திக்கிறது.
சென்னை பெரு நகரத்தின் ஒரு பகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இருந்து 600 கிலோ மீட்டர் தாவி மாநிலத்தின் - கிட்டத்தட்ட - தென்கோடியில் உள்ள சிறு நகர் தொகுதியான கோவில்பட்டியில் டிடிவி தினகரன் அவர்கள் “தொப்புக்கட்டீர்” என்று குதித்து விட்டார்.அவருடைய சாதியை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் இருப்பதும், மூன்றில் ஒரு பங்குவாக்காளர் கொண்ட கயத்தாறு ஒன்றியத்தை, அவருடைய “லெப்டினன்ட்” - கடம்பூர் ஜமீன்தார் - மாணிக்கராஜா தன்னுடைய சகலகலா வித்தகத்தின் மூலம் பிடிக்குள் வைத்திருப்பதும் கோவில்பட்டி தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகின்றன. அவருக்கு எதிரான இரண்டு அம்சங்களை கணக்கில் எடுக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஒன்று கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் கணிசமான வாக்கு வங்கி, இரண்டு, சகோதரி கனிமொழியின் நாடாளுமன்ற தொகுதியின் வரையறைக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி.
மேலும், மாணிக்கராஜாவின் ‘வித்தகம்’ ஊராட்சி ஒன்றிய தேர்தல் அளவிற்கு சட்டமன்றத் தேர்தலில் பலிக்கும் என்பது சந்தேகமே.மற்றொரு வேட்பாளர், அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பாக மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். சென்ற முறை வெறும் 400 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். அமமுக அப்போது பிரியவில்லை. அதிலும் இப்போது அமமுகவின் முதல்வர் வேட்பாளர் எதிர்த்து நிற்கிறார். ஆகவே ஏராளமான வாக்குகள் குறையும். தான்உட்கட்டுமானப்பணிகள் பல செய்திருப்ப தாகவும், செல்வாக்கு கூடி இருப்பதாகவும் கூறுகிறார். ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த ஒருவருக்கு இவை போதுமானவை அல்ல என்ற கருத்தே பொதுவாக நிலவுகிறது.இந்த இரண்டு “கிங்கிரர்களையும்” எதிர்த்துஒரு ‘சாதாரணர்’ போட்டியிடுகிறார். மதச்சார்பற்ற அணியின் சார்பாக மார்க்சிஸ்ட் சீனிவாசன் நிற்கிறார். தொகுதி மக்களின் “நாடித்துடிப்பை” நன்கு உணர்ந்தவர் சீனிவாசன். ‘தோழர்’ என்று அழைத்து, தோளில் கைபோட்டுபேசுவதற்குத் தோதானவர் சீனிவாசன். கோவில்பட்டி பகுதியில் பல்வேறு இயக்கங் களில் பங்கு பெற்று, மக்கள் பணியில் முன் நிற்பவர். யாரும் எந்நேரமும் எந்த பிரச்சனைக்காகவும் எளிதாக அணுகலாம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, சகல தரப்பு மக்களிடமும் ‘சகஜமாக ‘ பழகக்கூடியவர்.
சென்ற சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமன்ற வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் மதச்சார்பற்ற அணியின் மார்க்சிஸ்ட் சீனிவாசன் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இந்த ‘அரித்மெட்டிக்’ இந்த தேர்தலுக்கு பொருந்தாது என்று சிலர் சொல்லக்கூடும். எந்த ‘அர்த்மெட்டிக்’ படி பார்த்தாலும் சீனிவாசன் முன்னிலை பெறுவார்; ஒன்றே ஒன்றை தவிர - அது தான் ‘பணம்’.கோவில்பட்டி, தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த கலை, இலக்கியப் பண்பாட்டு மையங்களில் ஒன்று. அந்தப் பகுதியின் ‘இலக்கிய கர்த்தாக்கள்’ கி. ராஜநாராயணன், பூமணி, தேவதச்சன், சோ. தர்மன், சமயவேல், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், நாறும்பூநாதன் இன்னும் பல எண்ணற்ற இலக்கியவாதிகள் தோழர் சீனிவாசனுக்கு தங்களுடைய ஆதரவுகளை நல்கி இருக்கிறார்கள்.
சீனிவாசனுக்காக இளைஞர்களும், நடுத்தர வயதினரும், பெண்களும், ஏன் முதியவர்களும் கூட முனைப்பாக தேர்தல் பணியாற்றியுள்ளனர். ‘கவுன்சிலராக’ தன்னுடைய நம்பகத்தன்மையை நிலைநாட்டியுள்ள தோழர்சீனிவாசனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வரலாற்றில் இடம்பெற தயாராகிவிட்டது கோவில்பட்டி.
ச.பால்வண்ணம்