election2021

img

கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளரை குதிரையில் அழைத்து வந்து அசத்திய கிராம மக்கள்....

புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு கறம்பக்குடி பகுதியில் மேளதாளம் முழங்ககுதிரையில் அழைத்து வந்து அசத்தலான வரவேற்பைக் கொடுத்தனர் கிராம மக்கள்.

திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம்.சின்னத்துரை சனிக்கிழமை கறம்பக்குடி ஒன்றியப் பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். மருதன்கோன்விடுதியில் தொடங்கிய பிரச்சாரத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன்அரசு தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாண்டான்விடுதி, ரெகுநாதபுரம், கீராத்தூர், கிளாங்காடு, மணமடை, ஒடப்பவிடுதி, அங்கன்விடுதி, மைலன்கோன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்த பிரச்சாரம் சொக்கம்பேட்டையில் நிறைவடைந்தது.

பிரச்சாரத்தில் முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் க.மதியழகன், ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில்ரவிபல்லவராயர், ஞானவடிவேல், சிபிஐ சார்பில்சேசுராஜ், மதிமுக சார்பில் கணேசன், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வெள்ளை சக்திவேல், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுலைமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் கறம்பக்குடியில் அரசுபாலிடெக்னிக் கல்லூரி , குடிநீர் தட்டுப்பாட்டை போக்க காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், அனைத்துஏரி, குளங்களையும் தூர்வார நடவடிக்கை, கறம்பக்குடியில் ஆண்டு முழுவதும் செயல்படும் நேரடிநெல் கொள்முதல் நிலையம், மருதன்கோன்விடுதி அரசு கலைக் கல்லூரிக்கு மாணவர்களுக்கு வசதியாக கறம்பக்குடியில் இருந்து கூடுதல் அரசுபேருந்துகள் ஆகியவற்றுக்காக பாடுபடுவேன். கறம்பக்குடியிலேயே தனியாக எம்எல்ஏ அலுவலகம் திறந்து பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பேன் என வாக்குறுதி தந்து பிரச்சாரம் செய்தார்.

குதிரையில் அழைத்து வந்து வரவேற்ற கிராம மக்கள்
வேட்பாளர் சென்ற இடங்களில் எல்லாம்மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடிக்க பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலாக வாண்டான்விடுதி கிராமத்தின் எல்லையிலிருந்து குதிரையில் வேட்பாளரை ஊருக்குள் அழைத்து வந்து அசத்தலான வரவேற்பை கிராம மக்கள் கொடுத்தனர். பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டும், வேட்பாளரின் நெற்றியில் திலகமிட்டும் “நீங்கள்தான் ஜெயிக்கிறீங்க, வெற்றிவிழாவை இதைவிட சிறப்பாக நடத்துவோம்” என நம்பிக்கை அளித்தனர். பிரச்சாரம் செய்த ஒவ்வொரு கிராமத்திலும் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் அளித்தனர்.