election2021

img

அனைத்து சமுதாயத்திற்கும் துரோகிகள் நீங்கள்....

சாத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மீண்டும் சீட் கிடைக்காததால் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் சேர்ந்து சீட் வாங்கி அதே சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் ஏழாம்பொருத்தம். உள்ளே இருக்கும்போதே ராஜேந்திர பாலாஜியின் அராஜகங்களைப் பட்டியலிட்டவர் வெளியில் வந்தபிறகு தொகுதி முழுவதும் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் அதிமுக அணி வேட்பாளர்களை வீழ்த்துவதே தனது லட்சியம் என்று சூளுரைத்து, அதிமுக தலைமையின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளையம் ஒன்றியம் முறம்பு பகுதியில் தனது பரப்புரையைத் துவக்கிய ராஜவர்மன், “மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யக்கூடாது என்று எனக்கு உத்தரவிட்டவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதிமுகவில் யார் யார் கொள்ளைக்காரர்கள் என்பது மோடி, அமித்ஷாவுக்கு நன்றாகத் தெரியும்; அவர்கள் நினைத்தால், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள்; ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கட்சிக்குள் விசுவாசம், துரோகம் பற்றி பேசுகிறார்கள். நீங்களெல்லாம் பேசாதீர்கள்; மொத்த மக்களுக்கும், அனைத்து சமுதாயத்தினருக்கும் துரோகிகள் நீங்கள்; குறிப்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிமுகவுக்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் அதிமுக அணி மண்ணைக் கவ்வுவது உறுதி” என்று கூறினார். 

சாத்தூர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக அணியினர் அல்ல... அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களே போதும், அதிமுகவின் உண்மை வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற!