சென்னை, ஏப்.21- தமிழகத்தில் விடுபட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிக ளுக்கு கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் ஏப்.21 அன்று தொடங்கியது.இந்த நான்கு தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. ஆனால், ஆளும் கட்சிஇன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், சூலூர் தொகுதியில் முன்னாள் எம்பி, கே.சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.