election2021

img

சிபிஎம் வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு....

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு... 

நாகை மாலி - கீழ்வேளூர் (தனி) 

கீழ்வேளூர் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தோழர் நாகை மாலி முன்னாள் எம்எல்ஏ போட்டியிடுகிறார்.  அவருக்கு வயது 65. பி.ஏ., பி.எட். படித்தவர். மத்திய தொழிலாளர் துறையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, 2002 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றுகிறார். தற்போது கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார். செட்டிபுலம் ஆலய நுழைவு போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியவர். 2011-2016ம் ஆண்டில் கீழ்வேளூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இத்தொகுதியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.  இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

                                   ****************

எஸ்.கே. பொன்னுத்தாய் - திருப்பரங்குன்றம் 

திருப்பரங்குன்றம் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக தோழர் எஸ்.கே. பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். இவருக்கு வயது 46. +2 வரை படித்துள்ளார். 1994ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தார். இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றியவர். பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறைகள் எதிர்ப்பு, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்ட 4 டாஸ்மாக் கடைகளை அகற்றுதல், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். தற்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு கருணாநிதி என்ற கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

                                   ****************

கே. சீனிவாசன் - கோவில்பட்டி

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக தோழர் கே. சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 57. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். 1979ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் செயல்பட்டவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலாளராகவும், தற்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். நகர்மன்ற உறுப்பினராக 10 ஆண்டுகள் திறம்பட செயல்பட்டவர். கோவில்பட்டி நகர மக்களுக்கு நல்ல அறிமுகமானவர். தீப்பெட்டி தொழில் பாதுகாப்பிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதுடன், தீப்பெட்டி தொழில் பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு குமுதம் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

                                   ****************

எம். சின்னதுரை - கந்தர்வக்கோட்டை (தனி)

கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் தோழர் எம். சின்னதுரை  போட்டியிடுகிறார். அவருக்கு வயது 54. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். 1984ல் வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து ஒன்றியச் செயலாளர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் என பணியாற்றியவர். 1985ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும் 10 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர். கட்சி மற்றும் வாலிபர் சங்கம், விவசாயிகள் போராட்டம் என பல கட்ட போராட்டங்களில் பங்கேற்று 30 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். கடந்த 33 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று திறம்பட நடத்தியவர். தற்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், வி.தொ.ச. மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ச. ராஜாத்தி என்ற மனைவியும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

                                   ****************

ஏ. குமார் - அரூர் (தனி) 

அரூர் (தனி) தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக தோழர் ஏ. குமார் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 46. +2 வரை படித்துள்ளார். 1995ம் ஆண்டு கட்சியில் சேர்ந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் அரூர் இடைக்கமிட்டி செயலாளராகவும் பணியாற்றியவர். அரூர் பகுதியில் குடிநீர், பேருந்து வசதி, வீட்டுமனைப்பட்டா, பள்ளிக் கூட வசதிக்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியவர். வாச்சாத்தி மக்களுக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் துணை நின்றவர். தற்போது கட்சியின் தர்மபுரி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவருக்கு தனலெட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

                                   ****************

என். பாண்டி - திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக தோழர் என். பாண்டி  போட்டியிடுகிறார். அவருக்கு வயது 63. பி.யு.சி. வரை படித்துள்ளார். 1978ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மூலம் தனது அரசியல் பணியை துவக்கியவர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், மாநிலப் பொருளாளர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று 15 நாள் சிறை சென்றுள்ளார். தற்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு எஸ். மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

படக்குறிப்பு : சென்னை சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில்...