கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:மனிதநேயத்திற்கும், மண்ணை அடிமைப்படுத்தும் மதவெறிப் பாசிசத்திற்கும் இடைப்பட்ட போராட்டமாய் அமைந்த 2021 தமிழகசட்டமன்றத் தேர்தலில் சமூகநீதி, சமத்துவம்,மனிதநேயம், மாநில உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்திக் களம் கண்ட திமுகதலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியளித்ததமிழக வாக்காளப் பெருமக்கள் இதயங்கனிந்த நன்றியினை தெரிவிக்கிறேன்.மிக நேர்த்தியாக தேர்தல் வியூகம் அமைத்து கடுமையான உழைப்பை செலுத்திய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் வியக்கத்தக்க அர்ப்பணிப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. நான் போட்டியிட்ட பாபநாசம் தொகுதியில், நம்பிக்கையோடு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்கு கிறேன். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் பரபரப்பு மிக்க இறுதி பத்து நாட்களில், நான் பரப்புரையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டபோது எனக்காக, வாக்கு கேட்க சென்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து விவசாயிகளுக்கு கரும்பு டன்க்குரூ.4000, நெல்லுக்கு ரூ.2500, சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து விவசாயிகளின் நிலுவைத் தொகையை பெற்றுத் தருவேன். பாபநாசம்-அரியலூரை இணைக்கும் பாலத்தை விரைவில் கட்டி தருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.