tamilnadu

img

தனிமைப்படுத்தும் மையத்தில் ஒருவர் பலி: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை:
ஆம்புலன்ஸ் கேட்டும் உரிய நேரத்தில் அளிக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் மாம்பாக்கம் விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்தவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் காற்றைவிட வேகமாக பரவிவருகிறது. வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்துதல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “மலேசியாவிலிருந்து வந்து மாம்பாக்கம் விஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்த முகம்மது சரீப் ரத்த வாந்தி எடுத்து பரிதாப மரணம். ஆம்புலன்ஸ் கேட்டும் உரிய நேரத்தில் அளிக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் விபரீதம்” என பதிவிட்டுள்ளார்.மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணித்த முஹம்மது சரீப் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.