election2021

அன்று ஆதரவற்ற சிறுவனாக வாழ்க்கைப் போராட்டம்.... இன்று மக்களுக்காக செங்கொடி ஏந்தி சட்டமன்றம் நோக்கி....

ஆறாவது வயதில் தாயையும் ஒன்பதாவது வயதில் தந்தையையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தெருவில் பரிதவித்து நின்ற அந்த சிறுவனின் கண்ணீரை துடைத்து நெஞ்சோடு அரவணைக்க செங்கொடி இயக்கம் மட்டுமே, அவன் முன்பு கருணை வடிவாய் தாயுள்ளத்துடன் நின்றது.

கம்யூனிஸ்ட்  கட்சி அந்தச் சிறுவனது கல்விக்கு உத்தரவாதம் செய்தது. அவனை கட்சித் தோழர்களே கல்வியும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கொடுத்து வளர்த்தார்கள்.கட்சியும் தோழர்களும் தனக்கு அளிக்கும் இந்த அரவணைப்புக்கான நன்றியை ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக அதன் மூலம் ஒரு சிறந்த போராளியாக மாறுவதன் மூலமே திருப்பிச் செலுத்த முடியும் என்ற பகுத்தறிவின் விளைவாக கட்சியையும் அதன் கொள்கைகளையும் தனது நெஞ்சில் அணையாத நெருப்பாக ஏற்றிக்கொண்டு செயல்படத் தொடங்கினான். அந்த பச்சிளம் பாலகன்.திருவனந்தபுரத்தில் அருவிக்கரை தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தோழர்.ஸ்டீபன் தான் அந்த சிறுவன்... 

அவரது பாலர் பருவமும் பதின் பருவமும் நினைத்துப் பார்த்து இனிமையான நினைவுகளை அசைபோடத் தகுந்த சுகமான நினைவுகள் அல்ல.கல்லூரி வாழ்க்கையின் போது கட்சி அலுவலகமே தனது வீடென்று மனதில் கொண்டு, அங்கேயே தங்கி முழுநேரமும் இயக்கச் செயல்பாட்டில் ஓய்வின்றி செயல்படத் தொடங்கி.சிறந்த மாணவர் சங்கத் தலைவராக...கேரள பல்கலைக்கழக மாணவர் பேரவைப் பொதுச்செயலாளராக...1995-1996 காலகட்டத்தில் கேரள பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக துணைவேந்தர் பிரச்சனை, மருத்துவக்கல்லூரி பிரச்சனை போன்றவற்றுக்கான பிரம்மாண்டமான போராட்டங்களை தலைமையேற்று நடத்திய முக்கிய தோழர்களில் ஒருவர் என்று துவக்கம் முதலே பிரமிக்க வைக்கும் புயல் போன்ற களச் செயல்பாடு.
பின்னர் கட்சிக்கு சிறிதும் செல்வாக்கு இல்லாத பிரதேசத்தில் தனது 22 ஆம் வயதில் பஞ்சாயத்து வார்டு தேர்தலில் போட்டியிட்டு, அந்தப் பகுதியின் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவரைத் தோற்கடித்து தேர்தலில்  வெற்றி பெற்று, அந்த பஞ்சாயத்தின் வரலாற்றில் குறைந்த வயதுடைய தலைவர் ஆனார்... தொடர்ந்து இரண்டு முறை அந்த பஞ்சாயத்தை  வென்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றிய சிறந்த மக்கள் நல ஊழியர்.காட்டாக்கடை பகுதி கட்சி செயலாளர் என்ற முறையில் நீண்டகாலம் அந்தப் பகுதியில் மக்களுடன் நெருங்கிய தொடர்பு.

அத்தகைய ஒரு தோழரை மார்க்சிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக அருவிக்கரை என்னும், காங்கிரஸ் கட்சியின் நெருங்க முடியாத கோட்டை என்று கருதப்படும் தொகுதியில் நம்பிக்கையுடன் களமிறக்கியுள்ளது.ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டுக்கு இலக்கணமான வகையில் மக்களுடன் நெருக்கமாக உறவு கொண்டுள்ள தோழர். ஜி.ஸ்டீபன் மிக எளிதில் அருவிக்கரைத் தொகுதியில் வெற்றி பெறுவார் என்று ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தொகுப்பு ;  சதன்

தக்கலை