திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடக்கும் என்கிற முந்தைய வழக்கத்தை மாற்றி இடதுசாரிகளின் ஆட்சித் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளைக் கைப்பற்றி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டுக்கே முன்னுதாரணமான பல திட்டங்களை செயல்படுத்தியது. குறிப்பாக உலகத் தரமானகல்வியும் சுகாதாரமும் கேரள மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏற்பட்ட இரண்டு பெருவெள்ளத்திருந்து மக்களை பாதுகாத்தது. கோவிட் பெருந்தொற்றி லிருந்து மக்களை மீட்க மேற்கொண்டுவரும் சிறப்பான முன்னேற்பாடுகளை உலகமே பாராட்டியுள்ளது. ஏற்கனவேநிபா பெருந்தொற்றை முளையிலேயே கிள்ளி, உலகை வியப்பில்ஆழ்த்தியது.
மத்திய அரசு கேரளத்துக்கான வருவாய் வாய்ப்புகளை தடுத்தது. ஆனாலும் ‘கிப்பி’ போன்ற கேரள நிதி ஆதார ஏற்பாடுகள் மூலம் வளர்ச்சிப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்தபோது மாதம் ரூ.600 ஆக 36 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட நல ஓய்வூதியத்தை ரூ.1600 ஆக உயர்த்தி 52 லட்சம்பேருக்கு வழங்கியது. இந்தியாவிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.
எல்டிஎப் அரசை வீழ்த்த முடியாதமத்தியில் ஆளும் பாஜக, கேரள அரசின்மீதும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் அவதூறுகள் பரப்ப மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தியது. பெரும்பாலான ஊடகங்களும் எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பும் அத்தகைய சதி முயற்சிகளுக்கு துணை நின்றன. ஆனால், எல்டிஎப் அரசு மீது மக்கள்கொண்டுள்ள நம்பிக்கையை முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படுத்தினார். மக்கள் முன்னிலும் அதிக இடங்களுடன் ஆட்சித்தொடர்ச்சியை எல்டிஎப்புக்கு அளிப்பார்கள் என்றார். அதோடு பாஜகவின் கணக்கை கேரளத்தில் இந்த தேர்தல் முடித்து வைக்கும் என்றும் கூறினார். அது உறுதியான முறையில் நிறைவேறி இருக்கிறது.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிறன்று (மே.2) எண்ணப்பட்டன. அதில் தொடக்கத்திலேயே இடது ஜனநாயக முன்னணி முன்னிலை பெற்றது. இறுதியாக 99 இடங்களை வென்று புதிய வரலாறு படைத்தது. யுடிஎப்புக்கு 41 தொகுதிகள் கிடைத்தன. பாஜக ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நேமம் தொகுதியையும் இழந்து கேரளத்தில் இந்த தேர்தலில் தனது கணக்கை முடித்துக் கொண்டது.
தர்மடத்தில் பினராயி வெற்றி
முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் 49 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.