election2021

img

விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு ஆட்சி மாற்றம் உறுதி.... மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

சென்னை:
தமிழக சட்டமன்ற 16வது பேரவைக்கு 234 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் ஏப்.6ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு திட்டமிட்டப்படி வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 7 மணி வரைக்கும்நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி மையங்கள் முழுமைக்கும் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை வாக்காளர்கள் நிறைவேற்றினர். மாலை 3 மணிக்கு மேல் பல மையங்களில் கூட்டம் அலைமோதியது. காவல்துறையினரும், துணைராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர். இதனால் பெரும்பாலான இடங்களில் மோதலும் அசம்பாவித சம்பவங்களும் தவிர்க்கப்பட்டன. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.60 விழுக்காடு வாக்குப் பதிவு நடைபெற்றது. 

தலைவர்கள் வாக்களிப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி அருகே தமது சொந்த ஊரிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்திலும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புவனகிரியிலும், வைகோ கலிங்கப்பட்டியிலும் வாக்களித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள்  இரா. முத்தரசன், காதர்மொய்தீன், ஈஸ்வரன், வேல்முருகன், முருகவேல்ராஜன், அதியமான் உள்ளிட்டோர் தமது சொந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு தொடங்கியதும் பல்வேறு இடங்களில் எந்திரக் கோளாறுகாரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது. மாநிலம் முழுவதும் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மாற்றப்பட்டன. 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559  விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

“மக்கள் எழுச்சி - மே 2ல் முடிவு சிறப்பாக இருக்கும்”: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

எங்களது ஜனநாயகக் கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள், அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயகக் கடமையை மக்கள் முறையாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2 ஆம்தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி. மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருவதை பார்க்கும்போது ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றிபெறும்என்பது என்னைவிட ஊடகங்களுக்குத் தான் அதிகமாகத் தெரியும்.ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் நான் போட்டியிடும் தொகுதி உட்பட முக்கியத் தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அதற்குத் தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

வெற்றி உறுதி: கே. பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணிஆகியோர் சிதம்பரத்தில் அவரது வீட்டின்அருகே உள்ள நகராட்சி  நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.  பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழகம் முழுவதும் எழுச்சியாக  மக்கள் வாக்களித்து வருகிறார்கள். இது ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடுகளே அதிகம் தெரிகிறது” என்றார்.திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

;