election2021

img

தேர்தல் துளிகள்... (5 மாநில சட்டமன்றம்)

கேரளத்திற்கு நன்றி 

கேரளத்திற்கு மிகப்பெரும் நன்றியை உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்று முடிந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் நீங்கள் அளித்திருக்கும் வாக்கு ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் வலுப்படுத்தும் வாக்கு; வளர்ச்சி, மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தியே மாற்றுக் கொள்கைகளின் பாதை கேரளம் நிச்சயம் தொடர்ந்து பீடு நடை போடும் என்று உறுதியாக நம்புகிறேன் என பினராயிவிஜயன் கூறியுள்ளார்.

                               ***************

வாக்குப்பதிவு எவ்வளவு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு: கீழ்வேளூர் 80.1%. அரூர் 78.53%. கந்தர்வகோட்டை 75.40%, திருப்பரங்குன்றம் 72.74%, திண்டுக்கல் 68.94%, கோவில்பட்டி 67.4%.

                               ***************

‘நம்பிக்கை’ மீது தான் சந்தேகம்!

“வாக்குப் பெட்டியில் உள்ள அறைகள் தாழிட்டு முத்திரையிடும் போது ஆளுங்கட்சி வேட்பாளர்களோ, அவர்களது முகவர்களோ வரவில்லை.ஏனெனில் தேர்தல் அதிகாரிகள் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. நாம் சந்தேகப்பட வேண்டியதும் விழிப்புணர்வு கொள்ள வேண்டியதும் இந்த ‘நம்பிக்கை’ மீதுதான்” என்று தனது டுவிட்டர் பதிவின் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். 

                               ***************

அது எப்படி நடக்கிறது?

“அது எப்படி எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்்திரங்களில் தாமரைக்கேவாக்குகள் பதிவாகின்றன” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. வாக்குப்பதிவின் போது விருதுநகர், கன்னியாகுமரி உள்பட சில தொகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

                               ***************

நிபுணத்துவம் வாய்ந்தவரா?

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைதீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராவதற்கு ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றியிருக்க வேண்டுமென்பது விதியாகும். ஆனால் கிரிஜா வைத்தியநாதனுக்கு அந்த அனுபவம் இல்லை. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வுக்கு நிபுணத்துவ உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. இது எந்த விதத்திலும் நியாயமற்றது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விமர்சித்துள்ளது. 

                               ***************

‘மன்னிப்பு  கேட்க வேண்டும்’

கோவையில் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன், வாக்குப்பதிவு பெட்டிகள் வைத்த இடத்தை பார்வையிட வந்தபோது அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மோகனை தனது வாக்கிங் ஸ்டிக்கால் தாக்கியுள்ளார். வாக்குப் பதிவு நடந்த மறுநாளே ஒரு கட்சியின் தலைவர் இதுபோல் நடந்து கொள்வது மிகுந்த கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

                               ***************

எதற்காக இந்தப் பம்மாத்து?

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல்சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணித்திட வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அவர்களது கட்சியினருக்கு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் இப்படிச் சொன்னால் சரி; தேர்தல் அதிகாரிகள் பலரும் நீங்கள் சொல்வதை கேட்கும் போது எதற்காக இப்படி ஒரு பம்மாத்து அறிக்கை என்று கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

                               ***************

பினாமி ஆணையமா?

தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி உதயநிதி ஸ்டானினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் செந்தில்பாலாஜியை தரக்குறைவாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய ஐபிஎஸ் அண்ணாமலை மீதுநடவடிக்கை இல்லை. இது என்னதேர்தல் ஆணையமா? அல்லது பாரதிய ஜனதா கட்சியின் பினாமி ஆணையமா என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

                               ***************

விட்டுட்டிங்களே பாஸ்...!

சரத்குமார், ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் காசோலை திரும்பிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு உட்பட ஏழு காசோலை வழக்குகளில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளன. “டார்ச் லைட்டை பக்கத்திலேயே அடிக்காம விட்டுட்டிங்களே பாஸ்? ” என்று மக்கள்நீதி மய்யத்தின் தலைவரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் மதுர வாயல் தொகுதி முன்னாள்சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான க.பீம்ராவ். 

                               ***************

தற்செயலாகக் கூட அமையாது!

“கருப்பு சிவப்பில் சைக்கிள், முகக்கவசம் ஆகியவை தற்செயலாகக்கூட இருக்கலாம்... ஆனால் தற்செயலாகக்கூட காவிக்கலரில் சைக்கிளோ, முகக்கவசமோ அமையாமல் கவனமாக பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வெற்றி” என்று, வாக்குப்பதிவின் போதுதிரைக்கலைஞர்கள் விஜய்யும், அஜீத்தும் கருப்பு சிவப்பு சைக்கிள் மற்றும் முகக்கவசத்துடன் வந்தது பற்றிய கேள்விகளுக்கு சமூக ஊடகவாசிகள் பதிலளித்து வருகிறார்கள். 

;