election-2019

img

திருப்பூரில் கே.சுப்பராயனுக்கு பாத்திரத் தொழிற்சங்கங்கள் ஆதரவு


திருப்பூர், மார்ச் 30 -

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் கே.சுப்பராயனுக்கு ஆதரவளிப்பது என்று அனைத்து பாத்திரத் தொழிலாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சிஐடியு செயலாளர் கே.குப்புசாமியில் தலைமையில் பாத்திரத் தொழிலாளர் சங்க கூட்டுக் கமிட்டிக் கூட்டம் வெள்ளியன்று மாலை நடைபெற்றது. இதில் சிஐடியு நிர்வாகிகள் கே.ரங்கராஜ், எம்.குபேந்திரன், ஏஐடியுசி நிர்வாகிகள் பி.செல்வராஜ், நாகராஜ், ஐஎன்டியுசி நிர்வாகிகள் ஈஸ்வரன், முத்துக்குமார், எல்பிஎப் நிர்வாகிகள் வேலுச்சாமி, தர்மலிங்கம், எச்எம்எஸ் நிர்வாகிகள் திருஞானம், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பாரம்பரியம்மிக்க பாத்திரத் தொழில் தொடர்ந்து நசிந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பும், மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணமாகும். பாத்திர உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் தாறுமாறான விலையேற்றமும், தகடுகளின் கடுமையான விலை உயர்வும் இத்துடன் நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளது.

எனவே பாத்திரத் தொழிலையும், இந்த தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாத்திட மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை அப்புறப்படுத்த வேண்டும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்றும், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயனை அனைத்து தொழிலாளர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

---------------

ReplyReply allForward







;